×

கட்சியிலிருந்து விலகுகிறார் சீர்காழி மதிமுக எம்எல்ஏ: வைகோ அதிர்ச்சி

சென்னை: திமுக கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பான மதிமுக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் சீர்காழி எம்எல்ஏ செந்தில்செல்வன் புறக்கணித்ததோடு, மதிமுகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். மதிமுக பொதுக்குழு கூட்டம், அண்ணாநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மதிமுக உயர்நிலை குழு கூட்டம் மதிமுக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச் செயலாளர்கள் ரொகையா, பூமிநாதன், ஜீவன் உள்ளிட்ட 17 உயர்நிலைக் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

2017 முதல் 9 ஆண்டுகள் திமுக கூட்டணியில் மதிமுக நீடித்து வரும் நிலையில் கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவது தொடர்பாக இக்கூட்டத்தின் வாயிலாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், நடந்து முடிந்த தேர்தலில் 4 தொகுதிகளில் இரண்டில் உதயசூரியன் சின்னத்தின் போட்டியிட்டு வென்ற நிலையில், அந்த பதவிகளில் இருந்து ராஜினாமா செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், தவெக கூட்டணிக்கு செல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் இருவரும் உயர்நிலைக் குழுவில் இல்லாததால் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மட்டும் கலந்து கொண்டார். சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் செல்வன் கலந்துகொள்ளவில்லை. இது குறித்து அவர், தான் தொடர்ந்து திமுக உறுப்பினராக இருப்பதாகவும், மதிமுகவில் இருந்து விலகிவிட்டதாகவும், இதனால் இனி மதிமுக கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

தொடர்ந்து 5 ஆண்டுகள் எம்எல்ஏவாக பயணிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருந்து விலகுவதோடு 2 எம்எல்ஏக்களையும் ராஜினாமா செய்ய வைத்து தேர்தலை சந்திக்க வைகோ முயன்ற நிலையில் தற்போது அவர் விலகியிருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும், செந்தில் செல்வன் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைவார் எனக் கூறப்படுகிறது.

Tags : Sirkazhi ,MDMK MLA ,Vaiko ,Chennai ,MDMK ,DMK ,Senthilselvan ,
× RELATED அமைச்சருக்கும்-அமைச்சருக்கும் சண்டை...