சென்னை: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் செயல் அருவருக்கத்தக்கது, அநாகரீகமானது. சட்டமன்றம் என்பது திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட் அல்ல, அது மாண்புமிக்க அவை என செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: அடித்தட்டு மக்களை முன்னேற்ற பாடுபட்டவர் கலைஞர்; இந்த மண்ணில் மனிதர்கள் உள்ளவரை கலைஞர் புகழைப்பாடும் என ராகுல்காந்தி சொன்னார்.
அதையேதான் நான் சொல்கிறேன், இந்த மண்ணில் மனிதர்கள் உள்ளவரை திமுக தலைவர் ஸ்டாலின் பெயரை பேசும். அந்த அளவுக்கு வரலாறு படைத்துள்ளார். சட்டமன்றத்தில் நடந்தது அருவருக்கத்தக்கது அநாகரீகமானது. சட்டமன்றம் என்பது திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட் அல்ல, அது ஒரு மாண்புமிக்க வரலாற்றுச் சிறப்புமிக்க அவை. அங்கு சென்று கையை காட்டி பேசுவது, அப்பாவை காணோம் என்பதை காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
மு.க.ஸ்டாலினை போல் சட்டமன்றத்திற்கு வந்து செயல்பட்ட முதல்வர் யாரும் இல்லை என தரவுகள் சொல்கிறது. இன்று ஆட்சி மாறியிருந்தாலும் அவரின் திட்டங்கள் தானே இன்றைக்கு பேசிக்கொண்டு இருக்கிறது. அவரின் திட்டத்தைத் தானே நடைமுறைப்படுத்துகிறார்கள். புதுமைப்பெண், நான் முதல்வன், மக்களை தேடி மருத்துவம் போன்று எவ்வளவு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். உலகில் முதல்முறையாக காலை உணவுத்திட்டம் கொண்டு வந்தார். இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முதல்வர் வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கலாம்.
இரண்டாம் உலக போரில் வென்ற வின்சென்ட் சர்ச்சில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதனால், அவரை வரலாற்றில் இருந்து மறைக்க முடியுமா?. அதேபோல் தான் மு.க.ஸ்டாலினின் வரலாற்றை யாரும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. இன்றைக்கு ஏன் அவருக்கு வாக்களிக்கவில்லை என அழுதுகொண்டு இருக்கிறார்கள். எனது உறவினர்கள், சின்ன பிள்ளைகள் சொன்னதால் ஓட்டு போட்டுவிட்டு இப்போது, என்னிடம் வந்து தவறு செய்துவிட்டோம் எனக் கதறிக்கதறி அழுதுகொண்டு இருக்கிறார்கள்.
மாற்றம் என்பதை மாற்ற முடியாது. இதுபோல, அநாகரீகமாக கொச்சைப்படுத்தி, புண்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டியது நல்லது. இன்னமும் மரண ஓலங்களும், உயிர் பலியும் அடங்கவில்லை. பெண்களுக்கு முழுமையாக பாதுகாப்பு கொடுத்துவிட்டார்களா? குழந்தைகள் வன்புணர்வுக்கு உள்ளாகவில்லையா? கொலைகள் நடக்கவில்லையா? இதைச் சரிசெய்யாமல் பிறரைப் புண்படுத்துவது எந்த அளவிற்கு சரி.
அமோனியா வெளியான விபத்தில் இவர்கள் சரியாக மாதாமாதம் ஆய்வு செய்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது; மரண ஓலம்கேட்டு இருக்காது. இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என்று இதுவரை சொல்லவில்லை. அதைத்தான் நாங்கள் எதிர்பாக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
