பாலக்காடு, ஜூன் 25: திருச்சூர் மாவட்டம் வடக்காஞ்சேரி அருகே மொபட் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி அங்கன்வாடி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். வடக்காஞ்சேரி அருகே புதுருத்தியைச் சேர்ந்தவர் மினி (58). இவர், புதுருத்தி அருகே சாத்தன்படியில் உள்ள அங்கன்வாடி ஆசிரியையாக பணி புரிந்து வந்தார். இவர், தனது உறவினரின் எலக்ட்ரிக் மொபட்டில் பின்னால் அமர்ந்து அங்கன்வாடிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது சுடிதார் துப்பட்டா மொபட் சக்கரத்தில் சிக்கி சாலையில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார். இதனைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் ஆசிரியை மீட்டு திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வடக்காஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
