விஜயராகவ பெருமாள் கோயிலில் கருடசேவை உற்சவம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயிலில் நேற்று காலை கருடசேவை உற்சவம் சிறப்பாக நடந்தது. திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 7ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, 6ம் தேதி இரவு சேனை முதன்மையார் புறப்பாடு நடந்தது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்வியதேசங்களில் ஒன்றான திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயில் விளங்குகிறது. இங்கு பிரம்மோற்சவ கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பெருமாள் சிம்ம வாகனம், கருடசேவை, சேஷ வாகனம், நாச்சியார் திருக்கோலம், சந்திரபிரபை, யாளி வாகனங்களில் வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார்.

இந்நிலையில், 3ம் நாளான நேற்று காலை விஜயராகவப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி விதியலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் குமரன் மற்றும் கோயில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Related Stories: