சென்னை: புதிய தமிழக காங்கிரஸ் தலைவர் தேர்வை கட்சி தலைமை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இன்னும் ஒரு வாரத்துக்குள் தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு வலு சேர்க்கும் வகையில், இதுபற்றி விவாதிக்க காங்கிரஸ் அமைச்சர்களுக்கு டெல்லி மேலிடம் திடீர் அழைப்பு விடுத்துள்ளது. பெங்களூருவில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை அண்மையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது, ‘‘மாநில தலைவர் பதவி ராஜினாமா குறித்து கார்கேவிடம் பேசினேன். என் கோரிக்கையை ஏற்று, தலைமை என்னை விடுவிக்கும் என நம்புகிறேன்,’’ என்றார். இதனால் தமிழக காங்கிரஸ் கட்சி புதிய தலைவரை நியமிக்கும் முடிவை கட்சி தலைமை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று காங்கிரஸ் அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ் குமார் மற்றும் எம்எல்ஏக்கள் 3 பேரையும் டெல்லிக்கு வரும்படி கட்சி தலைமை திடீர் அழைப்பு விடுத்துள்ளது. இதனால் நேற்று அனைவரும் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.
தமிழக காங்கிரசின் புதிய தலைவர் பதவிக்கு, எம்.பி.,க்கள் மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த், கார்த்தி சிதம்பரம், விஷ்ணுபிரசாத் ஆகியோர் போட்டியில் உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சராக பதவி வகித்த ஒருவருக்கு, அகில இந்திய காங்., பொதுச்செயலர் பதவி வழங்கப்பட உள்ளதாவும் தகவல் வெளியாகியுள்ளது. ரேஸில் மாணிக்கம் தாகூர் மற்றும் விஜய் வசந்த் ஆகியோர் முன்னணியில் இருப்பதாக தெரிகிறது. ஒரு வாரத்துக்குள் புதிய தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி ஏற்பார் என்ற எதிர்பார்ப்பு காங்கிரசார் மத்தியில் எழுந்துள்ளது.
