முதலீடுகளை சீர்குலைக்கும் ரீல்ஸ் கோஷ்டி அரசு: டி.ஆர்.பி.ராஜா தாக்கு

சென்னை: தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் ரீல்ஸ் கோஷ்டி அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: முந்தைய ஆட்சிக் காலத்தில் ரூ.3 லட்சம் கோடி முதலீடுகள் மாநிலத்தை விட்டு வெளியேறிவிட்டதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை அடிப்படை புரிதல் இல்லாத பச்சைப் பொய். செமிகண்டக்டர் நிறுவன முதலீடுகள் தானாக குஜராத் மாநிலத்திற்கு செல்லவில்லை.

ஒன்றிய அரசால் திட்டமிட்டு தமிழ்நாட்டிலிருந்து பறிக்கப்பட்டவை. டொயோட்டா வாகனத் துறை நிறுவனத்தைப் பொறுத்தவரை, அவர்கள் ஏற்கனவே பல ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தில் தங்களது முதலீட்டை செய்துள்ளனர். ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலீடு செய்யும் தங்களது இறுதி முடிவை தற்போதைய தவெக ஆட்சி அமைந்த பிறகு தான் அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மாநிலத்தை விட்டு முதலீடுகள் வெளியேறுவது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், முதலீடுகள் வெளியேறாமல் தடுக்க என்ன நடவடிக்கைள் எடுத்தது என்பதை விளக்க வேண்டியதே புதிய அரசின் கடமை. அதற்கு பதிலாக, முந்தைய அரசின் கடின உழைப்பின் மீது தங்களது பெயர் ஒட்டும் செயலில் அவர்கள் ஈடுபடக் கூடாது. ரூ.12.50 லட்சம் கோடி முதலீடு மூலமாக 30 லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவாகியது திமுக அரசு.

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் பல இதர காரணங்களினால் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் லிஸ்டை வைத்துக் கொண்டு 3 லட்சம் கோடி இழப்பு என்பது பொய்யான குற்றச்சாட்டு. அ.தி.மு.க ஆட்சியில் 3 லட்சம் கோடிக்கும் குறைவாகவே முதலீடுகள் வந்துள்ள நிலையில் எங்கள் ஆட்சிக் காலத்தில் ரூ.12.6 லட்சம் கோடி முதலீட்டு உறுதிமொழிகளையும், 36 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது.

ரீல்ஸ் மாபியா கோஷ்டிகளை வைத்து பொய்களைப் பரப்பி, திமுகவை குறை சொல்வதை இனியாவது விட்டொழியுங்கள். 2016-21 அதிமுக ஆட்சியை விட 5 மடங்கு அதிகமான முதலீடுகளை திமுக அரசு ஈர்த்த நிலையில், அந்தளவில் கூட அல்ல, உங்கள் ஆட்சிக் காலத்தில் எங்களைவிட இரண்டு மடங்கு அளவிலாவது முதலீட்டை ஈர்க்க முடிகிறதா என்கிற வேலையை உருப்படியாகப் பாருங்கள், அர்த்தமற்ற அரைவேக்காட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு குறை பேசுவதை விட்டு, கொஞ்சமாவது செயல்படட்டும் தவெக அரசு இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: