சிறையில் உள்ள தண்டனை கைதிகளுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை மாநில அரசு விடுப்பு வழங்கலாம்: உயர் நீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு உத்தரவு

சென்னை: ஆயுள் தண்டனை கைதி மற்றும் 3 தண்டனை கைதிகளுக்கு அவசரகால விடுப்பு (பரோல்) வழங்கக் கோரி உறவினர்கள் அளித்த மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து கைதிகளின் உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். அந்த மனுவில், விசாரணை நிலுவையில் இருக்கும்போது கைதிகளுக்கு விடுப்பு வழங்க முடியாது என சிறை விதிகள் உள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு அந்த சிறை விதி பொருந்தாது என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற இரு வேறு அமர்வுகள், மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். ஒரு அமர்வு விடுப்பு வழங்கலாம் என்றும் மற்றொரு அமர்வு விடுப்பு வழங்க கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. இந்த பிரச்னையை தீர்க்க தலைமை நீதிபதி தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, எம்.நிர்மல்குமார், சுந்தர் மோகன் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவி செய்வற்காக மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினத்தை நீதிபதிகள் நியமித்தனர். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினம் ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தில் இதேபோல் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அதில், 3 முக்கிய விசயங்கள் குறித்து விசாரணை செய்ய தமிழக அரசும் மற்ற மாநிலங்களும் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றம்தான் இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு சரியாக இருக்கும். ஏற்கனவே உச்ச நீதிமன்ற உத்தரவில், வழக்கு நிலுவையில் இருந்தாலும் விடுப்பு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தானில் மட்டும் பரோல் என்பதை மன்னிப்பு வழங்குவதாக கருதப்படுகிறது. விடுப்பு பெறுவது என்பது ஒவ்வொரு தண்டனை கைதிகளின் உரிமைகளில் ஒன்று. அரசு சரியாக செயல்படாத நிலையில் மட்டுமே நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நிவாரணம் வழங்கலாம்.

சிறை கைதியாக இருந்தாலும் அரசியலமைப்பில் அவருக்கு தரப்பட்ட தனி மனித உரிமையை அரசு வழங்க மறுக்க முடியாது. இது அரசியலமைப்பு 21வது சரத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது என்றார். இந்த வாதங்களையும், அவர் தாக்கல் செய்த உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் ஆவணங்களையும் பரிசீலித்த நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது.

அதனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை ஏற்கனவே உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் மாநில அரசே தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்கலாம் என்று தெரிவித்து வழக்கை தள்ளிவைத்தனர். இந்த தீர்ப்பை தமிழக உள்துறை செயலாளருக்கு அனுப்புமாறும், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் இந்த வழக்கை மீண்டும் பட்டியலிடுமாறு உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: