சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் மீதான புகாரில் சிபிஐ விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரி கல்வி மற்றும் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை ஏலத்தில் வாங்கியதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்துடன் கூட்டுச் சதி செய்து மிக உயர்ந்த மதிப்புள்ள அடமானச் சொத்துகளை மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு நடவடிக்கை எடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
அறக்கட்டளை சுமார் ரூ.48 கோடி கடன் பெற்றிருந்ததுடன், அதற்கான கணிசமான தொகையையும் திருப்பிச் செலுத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஒரு முறை தீர்வு திட்டத்தின் கீழ் ரூ.24 கோடி செலுத்தப்பட்டிருந்த போதிலும், வங்கி அதிகாரிகள் கட்டாய வசூல் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டதாகவும் புகாரில் கூறப்பட்டது. சுமார் ரூ.252 கோடி மதிப்புள்ள சொத்துகள் ரூ.45.60 கோடிக்கு மட்டுமே ஏலத்தில் விற்கப்பட்டதால் அறக்கட்டளைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், சிபிஐக்கு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி அறக்கட்டளை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, அறக்கட்டளை கடன் நிலுவைத் தொகையை செலுத்த முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில், வங்கி அதிகாரிகள் சொத்துகளை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்திற்கு மிகவும் குறைந்த விலையில் ஏலத்தில் விற்றுள்ளனர்.
இந்த ஏலம் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்திற்கு முறையற்ற ஆதாயத்தை வழங்கும் வகையில் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அறக்கட்டளைக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் குற்றச் சதி, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் உள்ளிட்ட கடுமையான குற்றங்களை வெளிப்படுத்துவதால் இந்து குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர், புகார் ஏற்கனவே பரிசீலிக்கப்பட்டு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் விஜிலென்ஸ் பிரிவுக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார். இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, குற்றச்சாட்டுகள் அதே வங்கியின் அதிகாரிகள் மீது உள்ள நிலையில், அந்த வங்கியின் விழிப்புணர்வு பிரிவு மேற்கொள்ளும் விசாரணை நம்பகத்தன்மையை ஏற்படுத்தாது.
பொது ஊழியர்கள் மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்துடன் கூட்டுச் சதி நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு சிபிஐ மூலம் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், மனுதாரர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி, சட்டப்படி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.
