சென்னை: முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு பின் தலைமை செயலக வளாகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது: பேரவையின் மாண்பையும், மரபுகளையும் சினிமா படப்பிடிப்பு தளமாக மாற்றுவது ஆரோக்கியமானது அல்ல. மக்களின் ஆதரவோடு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள முதலமைச்சர், தாங்கள் நல்லாட்சியை வழங்குவோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
அவ்வாறு கூறும் முதலமைச்சர், தன்னுடைய முதல் பதிலுரையிலேயே சைகை மூலமாகப் பேசியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. இந்த சைகை எதைக் காட்டுகிறது? எதிர்க்கட்சிகளை மொத்தமாக முடித்துவிட்டோம் என்ற சைகையை வெளிப்படுத்துகிறதா?
மக்களை வசியப்படுத்துவதற்காக திரைப்பட வசனங்களில் எதை வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம், அது அவரவர் விருப்பம். ஆனால், சட்டப்பேரவையில் இப்படிப்பட்ட சைகைகளைச் செய்வது, அதுவும் ஒரு முதலமைச்சர் செய்வது, ஆரோக்கியமான போக்காகத் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
