*பொதுமக்கள் பாதிப்பு
கடையம் : பொட்டல்புதூர் பகுதியில் ராமநதி ஆறு புதர் மற்றும் முள் மரங்களால் அடர்த்தியாக மூடப்பட்டு நீரோட்டம் தடைபட்டுள்ளது. இதனால் உள்ளூர் கிணறுகளுக்கு போதுமான நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து ராமநதி ஆறு உற்பத்தியாகி, கடையம், ரவண சமுத்திரம், விலாசமுத்திரம், பொட்டல்புதூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாகப் பாய்ந்து செல்கிறது.
ஆனால், பொட்டல்புதூர் பகுதியில் தற்போது ஆற்றுப் பாதையில் அதிக அளவில் புல், முள் மரங்கள் மற்றும் புதர்கள் அடர்ந்து காணப்படுகின்றன. இதனால் ஆற்றின் இயல்பான நீரோட்டம் முற்றிலும் தடைபட்டுள்ளது.
இந்நிலையில் ஆற்றங்கரையோரம் உள்ள உறை (திறந்த) கிணறுகளுக்கு போதுமான அளவு நீர் செல்லவில்லை. இதனால் அப்பகுதிகளில் குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் கிடைக்காமல் தள்ளாடி வருகின்றனர்.
இதுகுறித்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மனு அளித்தனர். ஆற்றைச் சீரமைக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “ராமநதி ஆற்றை முழுமையாக புல், முள் மரங்கள் மற்றும் புதர்கள் அடைத்துவிட்டது. இவற்றை உடனடியாக அகற்றி, ஆற்றின் நீரோட்டத்தை மீட்டெடுக்க வேண்டும். இல்லையென்றால் குடிநீர் தட்டுப்பாடு மேலும் மோசமடையும்.
எனவே ஆற்றுப் பாதையில் உள்ள புல், முள் மரங்கள் மற்றும் புதர்களை அகற்றுதல், ஆற்றின் நீரோட்டத்தை மீட்டெடுத்தல், குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணுதல் போன்ற பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்’ என்றனர்.
