*250 வாகனங்கள் நிறுத்தி வைப்பு
தென்காசி : தென்காசி மாவட்டத்தில் ஜேசிபி இயந்திரங்களுக்கான கட்டணங்களை உயர்த்தக்கோரி உரிமையாளர்கள் 2 நாள் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் குத்துக்கல்வலசை, கடையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 250க்கும் மேற்பட்ட ஜேசிபி இயங்கி வருகிறது.
இதன் உரிமையாளர்கள் பலர் தங்களது வாகனங்களுக்கான விலைவாசி உயர்வு, டீசல் எரி பொருள் மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஜேசிபி இயந்திரங்களுக்கு வாடகையாக ஒரு மணிநேரத்திற்கு ரூ.1500ம், கிட்டாச்சி வாகனத்திற்கு ரூ.2000ம், மினி ஹிட்டாச்சி வாகனத்திற்கு ரூ.1200ம், புல்டோசர் வாகனத்திற்கு ரூ.1000ம் கட்டண உயர்வு ஆகியவற்றை முடிவு செய்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் இரண்டு நாட்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மாரிச்செல்வம், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் சுடலைதுரை, துணை செயலாளர் தங்கம், ஒருங்கிணைப்பாளர் பால் ஆகியோர் தலைமையில் உரிமையாளர்கள் குத்துக்கல்வலசை பகுதியில் ஜேசிபி இயந்திரங்களை நிறுத்தி வைத்து உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
