தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சிறந்த ஆய்வு கட்டுரைகள் மாணவர்களுக்கு சிஇஓ பாராட்டு

நாமக்கல், மார்ச் 9: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், 28வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு கடந்த  ஜனவரியில் கூகுல்மீட் மூலம் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 6 முதல் 10ம்வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, உள்ளூர் பிரச்னைகளை அடிப்படையாக கொண்டு மண்வளம் காப்பத்தில் கரிம உரத்தின் பங்கு, ஒரே வகையான ஊடுபயிர், கிராமப்புற சூழல் கலாச்சாரம், சிமெண்டுக்கு பதில் முட்டை ஓடு பயன்பாடு போன்ற பல்வேறு தலைப்புகளில் மொத்தம் 38 ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.இதில் செட்டியாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சமர்ப்பித்த 6 ஆய்வு கட்டுரைகள், பல்லக்காபாளையம் எஸ்ஆர்கே மெட்ரிக் பள்ளி மாணவர்களின் 2 ஆய்வு கட்டுரைகள் என மொத்தம் 8 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டது. இதில், எஸ்ஆர்கே மெட்ரிக் பள்ளி மாணவர்களின் முட்டை ஓடு தலைப்பு தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த ஆய்வுகட்டுரைகளை சமர்ப்பித்த மாணவ, மாணவியரை, நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைலாசம், ஆசிரியர்கள் மெய்யழகன், பரிமளம், எஸ்ஆர்கே மெட்ரிக் பள்ளி ஆசிரியை மஞ்சு, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர்  துரைசாமி, செயலாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: