சிக்கபூவத்தியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் மறியல்

கிருஷ்ணகிரி, மார்ச் 9: கிருஷ்ணகிரி அடுத்த சிக்கபூவத்தி கிராமத்தில் சீரான குடிநீர் விநியோகம் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராயக்கோட்டை சாலையில் உள்ள சிக்கபூவத்தி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்னை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில், சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி, நேற்று சிக்கபூவத்தி கிராம மக்கள், கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை பிரதான சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் பேசி சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதை தொடர்ந்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால், கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில், சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories:

>