ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி விஷேச நாட்களில் மட்டுமே சதுரகிரி மலையேற அனுமதி: வனத்துறை அறிவிப்பால் பக்தர்கள் ஏமாற்றம்

 

வத்திராயிருப்பு: ஐகோர்ட் கிளை உத்தரவைத் தொடர்ந்து, விஷேச நாட்களில் மட்டுமே சதுரகிரி மலையேறி சென்று வழிபாடு நடத்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது. இதுதெரியாமல் நேற்று அங்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பின்னர் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

கடந்தாண்டு ஏப்ரல் முதல் ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி தினசரி காலை 6 முதல் காலை 10 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக முருகன் என்பவர் தாக்கல் பொதுநல வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை அமர்வு, சதுரகிரி கோயிலுக்கு தினசரி மலையேறிச்சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கிய உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து, அமாவசை, பவுர்ணமி வழிபாட்டிற்கு மாதம் 8 நாட்கள் மட்டுமே மலையேற அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இந்த உத்தரவு ஜூன் 22 (நேற்று) முதல் அமலுக்கு வருவதாகவும், தினசரி சதுரகிரி மலையேற தடை விதிக்கப்பட்டு, ஆனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்கு ஜூன் 27 முதல் ஜூன் 30 வரை பக்தர்கள் சதுரகிரி செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதுதெரியாமல் நேற்று காலை வழக்கம்போல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். ஆனால் வனத்துறை மலையேற அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Related Stories: