சென்னை: பெரியபாளையம் அருகே இறால் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே 2 பேர் இறந்த நிலையில், நேற்று மேலும் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் புனித பீட்டர் பவுல் கடல் உணவுப்பொருள் பதப்படுத்தும் ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் 120 பேர் பணியில் இருந்தபோது, திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் பணியில் இருந்த ஆண்கள், இளம்பெண்கள் என 74 பேர் வாயு கசிவில் பாதிக்கப்பட்டனர். மற்றவர்கள் வெளியே தப்பி ஓடினர்.
அமோனியா வாயு கசிவினால் மூக்கு, வாயில் ரத்தம் கசிந்து மயங்கி விழுந்தவர்களை சக தொழிலாளர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மஞ்சங்காரணை, செங்குன்றம் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 15 பேர் சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி முதல் நாளில் ஜுமானி ஜுவாங் (19) மற்றும் மாலோதி (20) ஆகிய 2 பேர் இறந்தனர்.
நேற்று காலை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கீதா ஜங்கா (24), மஞ்சங்காரணை மருத்துவமனையில் ஷிபானி (22), பூர்ணிமா (22), திலோமினி (21), பர்மாதி ஜிங்கா (19), அசாமை சேர்ந்த கீதா ஆஸ்தா (20) ஆகியோர் உயிரிழந்தனர். இதனால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 2வது ஷிப்டில் தொழிற்சாலையில் நிரந்தரமாக தங்கி பணியாற்றும் 84 ஆண்கள், 62 பெண்கள் என மொத்தம் 146 பேரை நேற்று முன்தினம் இரவு கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் பெரியபாளையம் தனியார் திருமண மண்டபத்திற்கு மாற்றினர்.
மேலும் பெரியபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவ குழுவை சேர்ந்த டாக்டர் சங்கீதா தலைமையில் டாக்டர்கள் பிரசாந்த், கீர்த்தனா ஆகியோர் கொண்ட 10 மேற்பட்ட மருத்துவ குழுவினர் மருத்துவ முகாம் நடத்தினர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தனர். அப்போது திருவள்ளூர் ஆர்டிஒ ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் பஞ்சு ஆகியோர் மருத்துவ முகாமை ஆய்வு செய்தனர். மேலும் திமுக சார்பில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எஸ்கே.ரமேஷ்ராஜ் மற்றும் முன்னாள் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் மஞ்சங்காரணை மருத்துவமனைக்கும், இறால் தொழிற்சாலைக்கும், தொழிலாளர்களை தங்க வைத்துள்ள திருமண மண்டபத்திற்கும் சென்று பார்வையிட்டார். இந்நிலையில் கன்னிகைப்பேர் கிராமத்தில் அமோனியா வாயுவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் எனவும், தொழிற்சாலையில் இளம் சிறார்களும் பணியாற்றியதாக கூறப்படுவதால் அதுகுறித்தும் விசாரிக்க வேண்டும் எனவும் விசிக மாவட்ட செயலாளர் நேசகுமார், அரசியல் ஆலோசனைக்குழு தலைவர் நீலவானத்து நிலவன், சினிமா பட இயக்குநர் கோபி நயினார் ஆகியோர் மஞ்சங்காரணை மருத்துவமனையில் இருந்த கலெக்டர் கவிதாவிடம் மனு கொடுத்தனர்.
மேலும் கன்னிகைப்பேர் தொழிற்சாலையில் உள்ள ஒன்றரை டன் அமோனியா வாயுவை டேங்கர் லாரி மூலம் மேட்டூர் எடுத்து செல்வதற்காக தொழிலாளர்கள் நிரப்பினர். சென்னை, திருவள்ளூரில் இருந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொழிற்சாலையை ஆய்வு செய்தனர். ஒடிசாவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் வாயு கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து நிலவரத்தை கேட்டறிந்தனர்.
மஞ்சங்காரணை, செங்குன்றம், சென்னை ஸ்டான்லி, ராஜிவ்காந்தி மருத்துவமனைகளில் இறந்தவர்களை அடையாளம் காட்டுவதற்காக நேற்று மாலை பெரியபாளையம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 8 பெண்களை போலீசார் அழைத்து சென்றனர். தொழிற்சாலை உரிமையாளர்களான மோகன், ஜோசப் ஜெகன், மேலாளர் டேனியல் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்: பேரவையில் எ.வ.வேலு கோரிக்கை
சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்குவதற்கு முன்பாக 110வது விதியின் கீழ் அமைச்சர் முகமது பர்வீஸ் விபத்து தொடர்பாக விளக்கம் அளித்தார். இதை தொடர்ந்து பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, 110வது விதியின் கீழ் பேசியதை விவாதிக்க முடியாது. இருந்தாலும் அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குற்றம் சாட்டுவது எங்களது நோக்கம் இல்லை. எனவே திருவள்ளூரில் அமோனியா வாயு கசிவு விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக அரசு சார்பில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும்.
மேலும், காவிரி தீர்மானத்தில் திருத்தம் செய்வது தொடபாக கருத்து தெரிவிக்க முழு உரிமை உண்டு. திருத்தத்தில் விளக்கம் கேட்க சட்டமன்ற உறுப்பினருக்கு உரிமை உள்ளது. திருத்தத்தில் முழு விவரம் சொல்லுங்கள் என யாரும் எங்களை கேட்கவில்லை, இதற்காக பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளோம். இது தமிழக விவசாயிகள் பிரச்னை காவிரி டெல்டா பிரச்னை. இதில் அரசியல் செய்யக்கூடாது. இது முழுமையாக வெற்றி பெற வேண்டும். காவிரி பிரச்னை தொடர்பாக பல்வேறு சட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
