நீட் மறுதேர்வு வினாத்தாளும் கசிந்ததா?.. வைரலாக பரவிய வீடியோ போலியானது என தேசிய தேர்வு முகமை மறுப்பு

 

 

புதுடெல்லி: நீட் யூஜி மறுத்தேர்வு வினாத்தாள் கசிந்ததாக கூறி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வீடியோவை தேசிய தேர்வு முகமை போலி வீடியோ என்று தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட நீட் யூஜி தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் நீட் மறுதேர்வு நடைபெற்றது. 20லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவபடிப்புக்கான நீட் தேர்வில் பங்கேற்றனர். வினாத்தாள் கசிவு விவகாரம் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தேசிய தேர்வு முகமை கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.

இந்நிலையில் நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிந்ததாக வீடியோ வெளியாகி உள்ளது. இதனை தேசிய தேர்வு முகமை மறுத்துள்ளது. தேசிய தேர்வு முகமை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ நீட் யூஜி 2026 தேர்வு தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலியான வீடியோ என்டிஏவின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோ போலியானது மற்றும் அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் பொய்யானவை. மாணவர்களை ஏமாற்றவோ அல்லது அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவோ இத்தகைய தவறான தகவல்களை திட்டமிட்டு உருவாக்குவதும், பரப்புவதும் கடுமையான குற்றமாகும்.

சட்ட அமலாக்க முகமைகளின் உதவியுடன் இத்தகைய உள்ளடக்கத்தை உருவாக்கியவர்கள் மீது என்டிஏ நடவடிக்கை எடுத்து வருகின்றது. தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் தேர்வு முகமையின் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடக பக்கங்களை மட்டுமே நம்புமாறும், இந்த தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் என்டிஏ கேட்டுக்கொள்கிறது. எங்களின் 20லட்சத்துக்கும் அதிகமான தேர்வர்கள் அமைதியான ம்றறும் நியாயமான தேர்வு நடைமுறைகளுக்கு தகுதியானவர்கள். இந்தியாவில் 5440 மையங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 14 மையங்களில் நீட் யூஜி மறுதேர்வு நடந்தது.

இந்த தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் நடத்தப்பட்டது. இது என்டிஏ மட்டும் தனியாகச் செய்த செயல் அல்ல. இது டீம் பாரத் அதாவது நாடு முழுவதும் உள்ள பலதரப்பட்ட மக்களின் கூட்டு முயற்சி.தேர்வை நடத்துவதற்கு இந்தியா முழுவதும் சுமார் 7லட்சம் அதிகாரிகள் அதாவது காவல் துறையினர், பார்வையாளர்கள் மற்றும் தேர்வு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இது சாதனை அளவாக வெறும் 37நாட்களில் மேற்கொள்ளப்பட்டது.

பல தொகுப்புக்களாக வினாத்தாள்களை தயாரிப்பதற்கு தங்கள் தனிப்பட்ட நேரத்தை ஒதுக்கி உதவிய நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களை சேர்ந்த நிபுணர்களுக்கு என்டிஏ தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: