3 மாநிலத்தில் நான்கு வாக்காளர் அட்டை நடிகர் பிரகாஷ் ராஜிக்கு பிடிவாரண்ட்: பெங்களூரு நீதிமன்றம் அதிரடி

 

பெங்களூரு: மூன்று மாநிலங்களில் நான்கு வாக்காளர் அடையாள அட்டைகளை சட்டவிரோதமாக வைத்திருந்த விவகாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜிக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. கர்நாடகாவின் சாந்தி நகர், தெலங்கானாவின் செரிலிங்கம்பள்ளி மற்றும் தமிழகத்தின் வேளச்சேரி ஆகிய பகுதிகளில் தலா ஒரு வாக்காளர் அடையாள அட்டையை நடிகர் பிரகாஷ் ராஜ் (59) பெற்றுள்ளார். இதில் தமிழகத்தின் வேளச்சேரி தொகுதியில் மட்டும் இரண்டு அடையாள அட்டைகள் என மொத்தம் 4 கார்டுகளை அவர் பெற்று தேர்தல் விதிகளை மீறியதாக பெங்களூரு சேஷாத்திரிபுரத்தைச் சேர்ந்த திலீப் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து விளக்கம் அளிக்க கோரி பெங்களூரு 48ம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஏற்கனவே 3 முறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை.

தொடர்ந்து நீதிமன்ற சம்மனை புறக்கணித்த நடிகர் பிரகாஷ் ராஜிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூரு நீதிமன்றம் தற்போது அதிரடி உத்தரவிட்டது. முன்னதாக, பிரகாஷ் ராஜை கண்டுபிடிக்க முடியவில்லை என போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், கடந்த 18ம் தேதி பெங்களூரு கப்பன் பார்க் போலீசார் பாதுகாப்புடன் அவர் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சட்ட விதிகளை மீறி 4 வாக்காளர் அட்டைகளை வைத்திருந்த விவகாரத்தில் ‘முறைப்படி நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: