பழுதடைந்த திருப்பூர் தபால் தலைமை அலுவலக கட்டிடம்

*சீரமைக்க கோரிக்கை

திருப்பூர் : திருப்பூர் ரயில் நிலையம் எதிரே மத்திய தலைமை தபால் அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. இந்த தலைமை தபால் நிலையத்தில் வழக்கமான தபால் மற்றும் பார்சல் சேவைகள் மட்டுமன்றி, பொதுமக்களுக்கு மிக அவசியமான சிறுசேமிப்பு திட்டங்கள், ஆதார் சேவைகள் மற்றும் புதிய பாஸ்போர்ட் விண்ணப்ப சேவை உள்ளிட்ட பல்வேறு முக்கியப்பணிகள் சேவைகளும் ஒரே இடத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் முதியவர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் பல்வேறு பணிகளுக்காக இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.

தற்போது, இக்கட்டிடத்தின் வெளிப்புறச் சுவர்கள், தூண்கள் போன்ற பகுதிகளில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து, உள்ளே இருக்கும் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்குப் பழுதடைந்துள்ளது.
கட்டிடத்தின் பல பகுதிகளில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. வெளிப்பக்கக் காம்பவுண்ட் சுவரிலும் பெரிய அளவிலான விரிசல்கள் ஏற்பட்டு சிதிலமடைந்து காணப்படுகிறது.

இதனால் சுவர்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய நிலை உள்ளது. திருப்பூரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இந்த மத்திய தபால் நிலையக் கட்டிடத்தின் நிலையை உணர்ந்து, அசம்பாவிதங்கள் ஏதேனும் நேரிடும் முன்பாக சம்பந்தப்பட்ட தபால் துறை உயர் அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு இக்கட்டிடத்தை முழுமையாகப் பழுதுபார்த்து சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: