* மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுகிறது
* கற்பனை, பகுத்தறியும் திறன் ஒருசேர வளர்கிறது
இசை என்பது வெறும் ஒலியின் சேர்க்கை அல்ல… அது பிரபஞ்சத்தின் ஆதி மொழி… எல்லைகளற்ற, மொழி களற்ற, இதயங்களை இணைக்கும் ஒரு மாபெரும் சக்தி இசைக்கு உண்டு. இசை உலக மொழியாக இருக்க வேண்டும், அனைவரும் அதை ரசிக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு ஆண்டுதோறும் ஜூன் 21ம்தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.
இசை மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல. அது ஒட்டுமொத்த ஜீவராசிகளுக்குமான உலகளாவிய மொழி. கிளாசிக்கல் இசையை கேட்கும் பசுக்கள் அதிக பால் கறக்கின்றன என்பதும், மெல்லிய இசையை கேட்கும் போது நாய்கள் மற்றும் பூனைகளின் பதற்றம் குறைந்து அவை அமைதியடைகின்றன என்பதும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பறவைகளின் கீதங்கள், காற்றின் அசைவு, கடலலைகளின் ஓசை என இயற்கையே ஒரு பிரம்மாண்ட இசைக் கச்சேரியாக தான் இயங்கி கொண்டிருக்கிறது. உலக அளவில் மேற்கத்திய இசையில் புகழ்பெற்ற மேதைகள், இசையுலகை வடிவமைத்த மாபெரும் ஆளுமைகள் உலகெங்கிலும் உள்ள மக்களை தங்கள் விரலசைவில் ஆட்டி வைத்த காந்த சக்திகள் ஆவர். இந்திய இசை என்பது ஆன்மீகமும், பக்திப் பரவசமும், ராகங்களும் கலந்த ஒரு பெருங்கடல்.
இந்திய சித்தார் இசையை உலக அரங்கிற்கு எடுத்து சென்று, மேற்கத்திய நாடுகளை இந்திய இசையின் பக்கம் திரும்ப செய்த மாமேதை பண்டிட் ரவிசங்கர், ஐநா சபையில் பாடி, இந்தியாவின் உயரிய ‘பாரத ரத்னா’ விருதை பெற்ற முதல் இசைக்கலைஞர் எம்.எஸ்.சுப்புலெட்சுமி, ‘ஷெனாய்’ எனப்படும் மங்கள வாத்தியத்தை உலக தரத்திற்கு உயர்த்திய பாரத ரத்னா கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லா கான், கர்நாடக இசையையும், மெல்லிசையையும் இணைத்து தூய தமிழில் காலத்தால் அழியாத காவிய பாடல்களை தந்த திரையிசை திலகங்கள் கே.வி.மகாதேவன், விஸ்வநாதன், ராமமூர்த்தி, மேற்கத்திய சிம்பொனியையும் தமிழ்நாட்டின் கிராமிய மண்ணின் இசையையும் பாமர மக்களும் ரசிக்கும்படி இணைத்த இசை மேதை.
பின்னணி இசையால் படங்களுக்கு உயிர் கொடுப்பது மட்டுமின்றி, கோடிக்கணக்கான மக்களின் தனிமைக்கு மருந்தாகவும் தரும் இசை மருத்துவர் தமிழர்களின் உணர்வோடும் உயிரோடும் கலந்த இசைஞானி இளையராஜா. இந்திய இசையை ஆஸ்கார் மற்றும் கிராமிய மேடைகளில் ஒளிர செய்த ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டவர்களை குறிப்பிடாமல் கடந்துவிட முடியாது. உளவியல் மற்றும் மருத்துவ ரீதியாக இசை என்பது ஒரு சிறந்த நோய் தீர்க்கும் மருந்து. நவீன மருத்துவம் இதனை ‘மியூசிக் தெரபி’ என்று அழைக்கிறது. மெல்லிசையைக் கேட்கும்போது உடலில் ‘கார்டிசோல்’ என்ற மன அழுத்த ஹார்மோன் குறைந்து, ‘டோபமைன்’ மற்றும் ‘எண்டோர்பின்’ போன்ற மகிழ்ச்சி தரும் ஹார் மோன்கள் சுரக்கின்றன.அறுவை சிகிச்சைக்கு பின் அல்லது கடுமையான நாள்பட்ட நோய்களால் அவதிப்படும் நோயாளிகளுக்கு இசை சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது.
சீரான ராகங்கள் இதய துடிப்பையும், இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கின்றன. தூக்கமின்மையால் அவதிப்படு பவர்களுக்கு இசை ஒரு வரப்பிரசாதம். அல்சைமர் எனும் தீவிர மறதி நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் கூட, தங்களுக்கு பிடித்த பழைய பாடல்களை கேட்கும்போது தங்களின் கடந்த கால நினைவுகளை மீட்டெடுக்கிறார்கள் என்று நரம்பியல் ஆய்வுகள் வியப்புடன் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கல்வியாளர் தங்கபாபு கூறியதாவது, மக்களின் தாலாட்டு முதல் ஒப்பாரி வரை, விடியல் முதல் இரவு வரை இசையே ஆளுகை செய்கிறது. மாணவர்களின் கற்றல் அடைவுகளில் இசையின் பங்கு மிக அலாதியானது. கல்வியோடு இசை இணையும் போது, மாணவர்களின் கற்றல் திறன் அபாரமாக மேம்படுகிறது.
இசையை கற்றுக்கொள்ளும் போது, குறிப்பாக பியானோ, வயலின், மிருதங்கம் போன்ற கருவிகளை வாசிக்கும் போது, மூளையின் இடது மற்றும் வலது பக்கங்கள் சமமாக தூண்டப்பட்டு, பகுத்தறியும் திறனும், கற்பனை திறனும் ஒருசேர வளர்கிறது. ஒரு பாடலின் மெட்டமைப்பை கொண்டு கடினமான சூத்திரங்களையோ, வரலாற்று நிகழ்வுகளையோ எளிதில் மனப்பாடம் செய்ய முடியும். இசை மாணவர்களின் கவனச்சிதறலை குறைத்து, ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரிக்கிறது. இசையின் தாளக் கட்டுகளும், மாத்திரைகளும் முழுக்க முழுக்க கணிதத்தை அடிப்படையை கொண்டவை. இசை பயிலும் மாணவர்களுக்கு கணிதம் எளிதில் கை வருகிறது.
பாடல்களை கேட்கும் போதும், பாடும் போதும் உச்சரிப்பு தெளிவு, புதிய சொற்களின் அறிமுகம் மற்றும் மொழி ஆளுமை இயல்பாகவே கூடுகிறது. இசை என்பது பொழுதுபோக்குக்கான ஒரு சாதனம் மட்டுமல்ல.அது ஆன்மாவை சுத்திகரிக்கும் ஒரு உன்னத கலை. கவலைகளில் மூழ்கியிருக்கும் போது தேற்றுவதற்கும், மகிழ்ச்சியின் உச்சத்தில் துள்ளி குதிப்பதற்கும் நமக்கு பக்கபலமாய் இருப்பது இசை மட்டுமே. இந்த உலக இசை தினத்தில், சாதி, மத, மொழி, இன எல்லைகளை கடந்து, மனிதநேயத்தை வளர்க்கும் ‘இசை’ என்னும் மகாசக்தியை போற்றுவோம். நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் இசையால் ரசிப்போம், வாழ்வை ருசிப்போம் என்றார்.
