இயற்கையின் எழில்மிகு வடிவங்கள்; மலர்கள் மலர்ந்தன நமக்காக… பார்க்கும் மனங்களை மலர வைக்கும்

 

* ‘மணம்’ மன அழுத்தத்தை குறைக்கும்

இயற்கை அன்னையின் எழில்மிகு வடிவங்கள் மலர்கள். நம் கண்களுக்கும், கருத்திற்கும் விருந்து படைப்பவை. இயற்கைக்கும் தன்னை பரிபூரணமாக அர்ப்பணித்து கொண்டவை. இந்தியர்கள் மலர்கள் மற்றும் அவற்றின் சூட்சுமமான குணங்கள், பயன்கள் பற்றி நன்கு அறிந்திருந்தனர். பார்க்கும் மனங்களை மலர வைப்பதே மலர்களின் பண்பு. கசக்கும் கைகளும் கமகமக்கும். நசுக்கும் போதும் நறுமணம் வீசும். சிதைக்கும் போதும் சிந்தையில் வாசம் வீசும். இவையே மலர்களின் இயல்பு. மலரின் அரும்புகள் மகளிரின் பல்வரிசைக்கு உவமையாக காட்டப்பட்டுள்ளன.

மலர்கள் தாவரங்களின் முக்கிய இனப்பெருக்க உறுப்புகள். அவை தங்கள் இயற்கை நறுமணம், வண்ணங்கள் மற்றும் மருத்துவ குணங்களுக்காக மிகவும் அறியப்பட்டவை. தமிழ்நாட்டின் பாரம்பரிய மலர்களில் மல்லிகை நறுமணத்திற்கு பெயர் பெற்றது. ‘முல்லை’ என்பது முல்லை நிலத்தின் முக்கிய மலர். செம்பருத்தி எனும் செவ்வரத்தம் மருத்துவ குணங்கள் நிறைந்த பூ. தாமரை இந்தியாவின் தேசிய மலர். இலக்கியங்களில் போற்றப்படும் மலர். கடவுள் வழிபாட்டிற்கும், வீடுகள் மற்றும் விழாக்களில் அலங்காரத்திற்கும் மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. மலர்கள் நமக்கு எத்தனையோ ரகசியங்களை, ஆன்மிக தத்துவங்களை, வேதத்தின் உட்பொருளை தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு மனிதரும் மலரைப்போல திறந்தநிலையில், வெளிப்படையாக இருக்க வேண்டும். ஒரு மலர் தனக்கு என்று எதுவும் இல்லாமல், யாரையும் பாகுபடுத்தி பார்க்காமல், எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லாருக்கும் பொதுவாக இருக்கிறது. அன்பு, இனிமை, மென்மை என அனைத்தையும் நமக்கே தருகிறது. இதுபோல மலரின் உண்மை பண்புகளை பெறுபவனே மிகவும் மகிழ்ச்சியானவன். இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
மலர்களுக்கும், மனித மனத்துக்கும் தொடர்பு உண்டு. மனம் சம்பந்தமான நோய்கள் பலவற்றை மலர்கள் சரிசெய்கின்றன. மனித வாழ்க்கை சிக்கல்களுக்கு பரிகாரமாக, ஆலயங்களில் குறிப்பிட்ட மலர்களால், குறிப்பிட்ட கிரகத்துக்கு அர்ச்சனை செய்தால் சங்கடம் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது.

இயற்கையின் மிகச்சிறந்த படைப்பான மலர்கள் அழகுக்கு மட்டுமல்லாமல், மனித ஆரோக்கியம், மன அமைதி மற்றும் சுற்றுச்சூழல் சமநிலைக்கும் மிகவும் தேவையானவை. பாரம்பரிய மருத்துவ முறைகளில் பூக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மல்லிகை உடற்சூட்டை தணித்து புத்துணர்வை தரும். ரோஜா இதழ்கள் குடல் புண்ணை குணப்படுத்தும். முருங்கைப்பூ பித்தத்தை போக்கும். மகிழம்பூ தலைவலி மற்றும் பல் பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணி. ரத்த மூலம் மற்றும் சீதபேதிக்கு தாமரை. உணவுக்கு பயன்படும் பூக்கள் சுவை, மணம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்த உதவுகின்றன.

மலர்களின் நறுமணம் மன அழுத்தத்தை குறைத்து, அமைதியான மற்றும் நேர்மறையான எண்ணங்களை உருவாக்க உதவும். ஒவ்வொரு மலருக்கும் ஒரு குறியீட்டு அர்த்தம் உண்டு. சிவப்பு ரோஜா உண்மை காதலின் சின்னம்; ஆனால் வெள்ளையோ தூய்மை மற்றும் அப்பாவித்தனத்தையும், மஞ்சள் (ரோஜா) நட்பையும் தெரிவிக்கின்றன. மேலும் தாமரை தூய்மை மற்றும் அறிவொளியையும், மல்லிகை அன்பு, அழகு மற்றும் அமைதியையும் குறிக்கின்றன. ஆர்க்கிட் மலர்கள் அழகு, ஆடம்பரம், வலிமையின் குறியீடு. சாமந்தியோ நேர்மறை ஆற்றல் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளம்.

இயற்கை எப்போதும் தேவையின் அடிப்படையில்தான் இயங்குகிறது. எந்த செடிக்கு எது தேவையோ, அந்த வகையிலே பூக்களும் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதழ்களை வைத்தே நாம் பூக்களை நேசிக்கிறோம். ஆனால் மலர்கள் ஆடைகளாகவே இதழ்களை அணிகின்றன; உள்ளிருக்கும் மகரந்தம், சூலகமே அவற்றின் இயல்பை தீர்மானிக்கின்றன. பத்துப்பாட்டு தொகுப்பில் உள்ள, கபிலர் யாத்த குறிஞ்சி பாட்டு, முகர்ந்தாலே வாடிவிடும் மென்மையான இதழ்களை கொண்ட அனிச்சம், எரியும் தீயை போன்ற எறுழ், இலக்கிய பாடல்களில் வேறெங்கும் பெயர் இல்லாத கூவிரம், குயில்கள் விரும்பி உண்ணும் குரவம், அடையாளம் காண்பதில் அறிஞர்கள் மாறுபடும் கரந்தை உட்பட 99 மலர்களை பற்றி பேசுகிறது. தலைவியும், தோழியும் இம்மலர்களை குவித்து விளையாடினார்களாம்.

மல்லிகையின் மணம் ஆளை தூக்கும்; ரோஜாவின் வாசனை மனதை மயக்கும். மலர்கள் என்றதும் நமது மனதில் வருவது அவற்றின் வண்ணவண்ண நிறங்களும், மனதை மயக்கும் நறுமணமும்தான். இந்த நறுமண தன்மையை கவனத்தில் கொண்டுதான், இலக்கியங்கள் மலரை ‘நறுவீ’ என்று சுட்டுகின்றன. மலரின் மணம் அதன் பூவிதழ்களில் கசியும் ஒருவகை நறுமண எண்ணெயில் இருந்து வருகிறது. தாவரங்கள் தமது மலர்களை உருவாக்கும்போது, இந்த நறுமண எண்ணெய் வேதிப்பொருளையும் சுரக்கின்றன. இவை உருக்குலைந்து சிதைந்து, ஆவியாகி காற்றில் நாற்புறமும் பரவுகின்றன. மலர்களின் நறுமணத்தில் திளைத்தாலும், பூக்கள் நமக்காக அைத உருவாக்குவதில்லை. மகரந்த சேர்க்கை புரியும் பூச்சியினங்களை கவர்ந்து இழுக்கவே, பூக்கள் நறுமண வலையை வீசுகின்றன.

சில மலர்கள் இரவிலும், வேறுபல பகலிலும் மலரும். மல்லிகையை போல இரவில் மலரும் மலர்கள் பெரும்பாலும் வெண்மை நிறமும், நறுமணம் மிகுந்தவையாகவும் இருக்கும். இரவில் நடமாடும் அந்துப்பூச்சி, விட்டில் பூச்சிகள் அயல் மகரந்த சேர்க்கை செய்யும் மலர்கள்தான் பெரும்பாலும் கூடுதல் நறுமணத்துடன் இருக்கும். பறவைகளால் நறுமணத்தை நுகரமுடியாது என்பதால், அவற்றால் மகரந்த சேர்க்கை நடக்கும் பூக்கள் நறுமணம் வீசுவதில்லை. எல்லா மலர்களின் நறுமணமும் ஒரேவிதமாக இருப்பதில்லை. ஆனால், கிழக்கு ஆசிய பகுதியில் வளரும் ‘டைடானியம்’ (Titanium) எனும் தாவரத்தின் பூ, இறந்த உயிரினத்தின் உடல் அழுகியதை போன்ற துர்நாற்றத்தை வெளியிடும்.

ஆண்டிற்கு 3 முறை மட்டுமே பூக்கும் மலர் என்பதால், பார்வையாளர்கள் பெருமளவில் கண்டு மகிழ்கின்றனர். ‘‘இதழ்கொண்டு மணம்தந்து தேன்சிந்தி மலர்நாட வண்டை அழைக்கும் நந்தவன பட்சிகள்; சிலகாலம் வாழ்ந்தாலும் சிறப்பாக சிரிக்கும் சிறுபிள்ளை சிற்பங்கள். புல்வெளியில் படர்ந்து, பசுமை கொட்டும் கொத்து பூக்கள். விட்டுவிட்டு பறக்கும் வண்ணத்துப் பூச்சிக்கும் வாசனை முகர கொடுக்கும், தெவிட்டாமல் தேனூட்டும் தேன்கிண்ணம் பூக்கள். மலர்வனமே, தூறல் வானில் துணியின்றி துவட்டும் புஷ்பங்களே உம்போல உறவுண்டோ இவ்வுலகில்’’.

மிக அழகிய 8 மலர்தோட்டங்கள்

1. வாங்-ஷி-யுவான்
சீனாவின் கூசு மாவட்டத்தில் உள்ள இந்த மலர் தோட்டம் கண்கவர் அழகுக்காக புகழ்பெற்றது. இது குடியிருப்பு பகுதி, மேற்கு தோட்டம், உள் தோட்டம் என 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
2. வில்லா ரோத்ஸ்சைல்ட்
பிரெஞ்சு ரிவியேராவில் உள்ள இந்த கடற்கரை தோட்டங்கள் தனித்துவமான கருப்பொருளை கொண்டவை. 9 தோட்டங்களில் அனைத்து நீர்வாழ் தாவரங்களும் நிறைந்துள்ளன.
3. வில்லா டி’எஸ்டே
இத்தாலியின் டிவோலியில் உள்ள வில்லா டி’எஸ்டேவியின் தோட்டங்கள் கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பில் ஒரு தலைசிறந்த படைப்பு. படிக்கட்டு தோட்டங்களில் ரோஜா, மல்லிகை, கேமிலியா, பனைகள் உட்பட பலவகை தாவரங்கள் உள்ளன.
4. ஸ்டவர்ஹெட்
இங்கிலாந்தில் ஹெல்த்பெயரில் உள்ள 2,650 ஏக்கர் பரபரப்பு கொண்ட ‘ஸ்டவர்ஹெட்’ எஸ்டேட் உலகின் மிக அழகான தோட்டங்களில் ஒன்று. வண்ணமயமான தாவரங்கள், நீர்நிலைகள், நினைவு சின்னங்கள் கண்கவர் காட்சியை வழங்குகின்றன.
5. பவர்ஸ் கோர்ட்
பவர்ஸ் கோர்ட் அயர்லாந்தின் விக்லோ கவுண்டியில் உள்ள பரந்த எஸ்டேட் உலகின் மிக அழகானவை. ஜப்பானிய பாணி தோட்டம், கிரேக்க புராண கடவுள் டிரைப்ட்டனின் பெயரிலான ஏரி, தோட்டங்கள், இத்தாலிய தோட்டம், டால்பின் குளம் ஆகியவை அடங்கும்.
6. சான்சூசி
பெர்லின் அருகே போட்ஸ்டாமில் உள்ள ஜெர்மனியின் 18ம் நூற்றாண்டு சான்சூசி தோட்டங்கள் இன்றுவரை பெரும் மக்கள் கூட்டத்தை ஈர்த்து வருகின்றன. இங்கு திராட்சை தோட்டங்கள், யூ மரங்கள், அத்திகளின் அலங்கார தோட்டம், நீரூற்றுகம்பீரமான காட்சியை தருகின்றன.
7. கியூ ராயல் தாவரவியல் தோட்டம்
லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் உள்ள ரிச் மண்ட் லண்டன் பரோவில் 121 ஹெக்டேர் நிலப்பரப்பின் இந்த ராயல் தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு பல அரிய தாவர இனங்கள் உட்பட உயிருள்ள தாவர மாதிரிகளின் பிரம்மாண்டமான தொகுப்பு உள்ளது.
8. டம்பார்டன் ஓக்ஸ்
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள இது பசுமையான புல்வெளிகள் மற்றும் அழகிய நீரோடைகள் அடங்கியது. இயற்கையின் பொழுதுபோக்குகளுடன் டென்னிஸ் மைதானங்கள், குளங்கள், பழத்தோட்டங்கள், காய்கறி தோட்டங்கள் உள்ளன.

மலரின் பருவங்கள்
தமிழுக்கே உரிய தனி சொல்வளங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று மலரின் பருவ நிலைகளை உணர்த்தும் பல சொற்கள். இது மலர்கள் குறித்த தமிழனின் ஆழ்ந்த அறிவையும், அவற்றுடனான நெருக்கத்தையும் நமக்கு பறைசாற்றுகிறது. ஊழ் – தோன்றாமல் கொம்பின் கொழுந்தில் இருக்கும் பருவம். நனை – நனைந்த ஈரம் போல இணரில் தோன்றும் பருவம். முகை – மொக்கு விடுவதற்கு முந்தைய முகிழ்க்கும் பருவம். மொக்குள் – மொக்கு விட்ட பருவம். அரும்பு – மொக்குள் அரும்பாகிய பருவம். மொட்டு – அரும்பியது மொட்டாகிய பருவம். போது – மொட்டு விரியும் பருவம். மலர் – விரிந்த மலரின் இளம் பருவம். பூ – விரிந்த பூவின் நல்பருவம். பொம்மல் – விரிந்த பூ மலர்ந்து பொம்மி (முதிர்ந்து) நிற்கும் பருவம். வீ – இணரில் (பூங்கொத்து) இருந்து விழவிருக்கும் பருவம். செம்மல் – இணரில் இருந்து உதிர்ந்து நிலத்தில் கிடக்கும் பருவம்.

பூக்கள் சுவாரஸ்ய தகவல்கள்
ஆண், பெண், இருபால் என பூக்கள் 3 வகை. மகரந்த தாள்களை மட்டும் பெற்றவை ஆண். சூலக வட்டத்தை பெற்றவை பெண். இவை இரண்டையுமே பெற்றவை இருபால் மலர்கள். பூக்களில் அல்லி, புல்லி, மகரந்ததாள், சூலகம் என 4 வட்டங்கள் காணப்படும். இவையே முழுமையான மலர்கள். ஒருசில வட்டங்கள் குறைந்து காணப்படின் அவை முழுமையற்ற மலர்கள். பூக்களை பற்றி படிக்கும் அறிவியல் ஆந்தாலஜி அல்லது புளோரிகல்சர். பூக்களின் நிறத்திற்கு காரணம் குரோமோபிளாஸ்ட். பல வண்ணங்கள், வடிவங்களில் பூப்பவை ஆர்க்கிட் தாவரங்கள். உலகின் மிகப்பெரிய மலர்ச்சந்தை நெதர்லாந்தில் உள்ள ஆல்ஸ்மீர். தமிழகத்தின் மிகப்பெரிய மலர்ச்சந்தை குமரி மாவட்டம் தோவாளை. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் மலர் குறிஞ்சி. சேர மன்னர்கள் பனம் பூவையும், சோழ மன்னர்கள் அத்திப்பூவையும், பாண்டிய மன்னர்கள் வேப்பம்பூவையும் சூடினர்.

Related Stories: