ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே காவிரி கூட்டு குடிநீர் பைப் லைன் உடைந்து பல மாதங்களாக 24 மணிநேரமும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதால் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் ஊராட்சிகளுக்கு காவிரி ஆற்றை நீராதாரமாக கொண்டு செயல்படுத்தப்படும் கூட்டுக்குடிநீர் திட்டம் அப்போதைய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.144.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வந்தது.
இதன் விரிவாக்க பணிகள் கடந்த 2020 மற்றும் 2023ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு திருப்பத்தூர் சுற்றுவட்டார கிராமங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இத்திட்டம் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 759 கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகள், நகராட்சி, பேரூராட்சி பொதுமக்களுக்கு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதன்மூலம் ஒன்றியம் நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் தரைமட்ட காவிரி நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு காவிரி கூட்டு குடிநீர் சேகரித்து கிராம ஊராட்சிகளுக்கும் நகராட்சி வார்டு பகுதிக்கும் பேரூராட்சிகளுக்கும் பிரித்து மேல்நீர் தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக பொதுமக்களிடமிருந்து குடிநீர் வரி வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட தாமலேரிமுத்தூர் ஊராட்சி லாரி ஷெட் அருகே திருப்பத்தூர்-வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் காவிரி கூட்டு குடிநீர் பைப்லைன் உடைந்து பல மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் 24 மணிநேரமும் குடிநீர் வீணாவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடமும், காவிரி கூட்டு குடிநீர் வடிகால் வாரியத்திலும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் காவிரி கூட்டு குடிநீர் பைப் லைன் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி வருவதை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்டுகொள்ளாத அதிகாரிகள்
தாமலேரி முத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் பைப் லைன் உடைந்து பல மாதங்களாக குடிநீர் வீணாகி வரும் நிலையில் துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் நேரில் சென்று பலமுறை தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் ‘அப்புறம் வந்து நேரில் பார்க்கிறோம்’ எனக்கூறி தட்டிக்கழிக்கிறார்களாம். இதுதொடர்பாக அலுவலகத்திற்கு போனில் தொடர்பு கொண்டு பலர் தெரிவித்தும் எவ்வித பயனும் இல்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
