செங்கோட்டை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்பட தென்மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் எம் சாண்ட், ஜல்லி, குண்டு கற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் கனரக வாகனங்களில் தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால், தமிழக – கேரளா எல்லையான எஸ் வளைவு முதல் செங்கோட்டை வரை அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும் தற்போது குற்றால சீசன் துவங்கியநிலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகமாக வர துவங்கியதால் செங்கோட்டை, புளியரை, தென்காசி, குற்றாலம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் புளியரை வழியாக கனிம வள வாகனங்கள் கேரளாவுக்கு செல்லக்கூடாது என போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து தென்காசி கலெக்டராக புதிதாக பொறுப்பேற்ற ரஞ்சித் சிங், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரையும், இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையும் மட்டுமே கனிமவள லாரிகள் செல்ல அனுமதிக்கப்படும் என்றும், குற்றால சீசன் முடியும் வரை அதாவது ஆகஸ்ட் மாதம் வரை, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை புளியரை வழியாக கேரளாவுக்கு கனிமவள லாரிகள் செல்ல முழுமையாக தடை விதிக்கப்படுவதாக அறிவித்தார்.
இதனால் கனிம வள வாகனங்கள் ஆங்காங்கே சாலையின் ஓரங்களில் நிறுத்தப்பட்டது. கனரக வாகனங்கள் செல்லாததால் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், புளியரை பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி இன்றி பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களை ஓட்டி சென்று வந்தனர். கலெக்டரின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் இதேபோல் ஆண்டு முழுவதும் கனிம வள வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்தால் நன்றாக இருக்கும் என பரவலாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். வழக்கமாக புளியரை வழியாக கேரளாவுக்கு செல்லும் சிமெண்ட், டேங்கர், பால், பூ, லாரிகள் தங்கு தடையின்றி சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.
