குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த பஞ்சப்பட்டி, போத்ராத்தம்பட்டி பாப்பக்காப்பட்டி, வேங்கம்பட்டி, புதுப்பட்டி, வீரவல்லி, மேல குட்டப்பட்டி, கோட்டைமேடு, வாலாந்தூர், பரளி மேட்டு, மருதூர், குமாரமங்கலம் வழியாக பல்வேறு கிராமங்களில் இருந்து மழைக்காலங்களில் வரும் தண்ணீர் காட்டுவாரி பாலத்தின் வழியாக சென்று பெட்டவாய்த்தலை காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனால் பஞ்சபப்ட்டி முதல் பெட்டவாய்த்தலை இடையே சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த காட்டுவாரி வாய்க்காலால் பயனடைந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வாய்க்கால் பராமரிப்பு இன்றி இருப்பதால் செடி கொடிகள் அடர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் போக வழியில்லாமல், ேதங்கி விடுகிறது. சில நேரங்களில் வயல் வழிகளில் சென்று பயிர்களை நாசமாக்கி விடுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை அடைகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு மழைக்காலங்களிலும் தொடர்ந்து நடைபெறுவதால் விவசாயிகள் பெருத்த கவலை உடன் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஆங்காங்கே காட்டுவாரியில் குறுக்கே புதிய பாலங்கள் கட்டப்படுவதால் தண்ணீர் செல்வது பெரும் சிரமமாக இருந்து வருகிறது. அதனால் விவசாயிகள் நலன் கருதி பஞ்சபட்டியில் இருந்து பெட்டவாய்த்தலை வரை செல்லும் காட்டுவாரி வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
