- கரூர் போலீஸ்
- சென்னை பட்டினபக்கம்
- அமைச்சர்
- செந்தில் பாலாஜி
- சென்னை
- வருமானவரித் துறை
- திமுக
- அசோக்
- கரூர்
சென்னை: கடந்த 2023ம் ஆண்டு கரூரில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வருமான வரித்துறை பெண் அதிகாரி உள்ளிட்டோரிடம் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பெண் அதிகாரி மீது தாக்குதல் நடத்தி காரை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாதிக்கப்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அடையாளம் தெரியாத 50 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் த.வெ.க ஆட்சி அமைந்தவுடன் அந்த வழக்கானது தற்போது மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் இந்த வழக்கில் நீண்ட நாட்களாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளதால் கரூர் டவுன் போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமாரிடம் கரூர் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்து அவரை தேடிவந்தாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கரூர் டவுன் போலீசார் அசோக் குமார் செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது அவரது செல்போன் டவர் லொக்கேஷன் சென்னை, பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர் பகுதியில் காண்பித்தால் நேற்று காலை கரூர் மாவட்ட காவல் துறையினர் சென்னையில் உள்ள அசோக்குமார் வீட்டுக்கு விசாரணை நடத்த வந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் போலீசார் வீட்டில் இருந்த ஊழியர்களிடமும், அக்கம் பக்கத்திலும் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் வீட்டின் முன்பு ஒரு இன்னோவா கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த வாகனம் அசோக்குமார் பெயரில் இருப்பதையும் போலீசார் ஆவணப்படுத்திச் சென்றுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
