×

டூவீலரில் வேகமாக சென்றதை கண்டித்து கன்னத்தில் அறைந்த பெண்ணை சரமாரி வெட்டிக்கொன்ற வாலிபர்: தோட்டத்தில் உடல் வீச்சு

பென்னாகரம்: டூவீலரில் வேகமாக சென்றதை கண்டித்து, கன்னத்தில் அறைந்த பெண்ணை, வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை செய்து தோட்டத்தில் சடலத்தை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே எரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (50), கூலித்தொழிலாளி. கணவனை பிரிந்த இவர், தனியாக வசித்து வந்தார். திருமணமாகி சென்ற இவரது மகள் இந்து, நேற்று முன்தினம் தாயை பார்க்க, குழந்தையுடன் வந்துள்ளார். இரவு 8 மணியளவில் வீட்டிற்கு டூவீலரில் திரும்பி செல்வதற்காக, இந்து கணவருடன் சாலையில் நின்றிருந்தார். வழியனுப்ப லட்சுமியும் நின்றிருந்தார். அப்போது, அந்த வழியாக அதே பகுதியைச் சேர்ந்த வஜ்ரவேல் மகன் குழந்தைவேல் (22), டூவீலரில் வேகமாக சென்றுள்ளார். இதை பார்த்த லட்சுமி, மெதுவாக செல்ல மாட்டாயா? என கண்டித்துள்ளார். இதில் வாய் தகராறு ஏற்படவே ஆத்திரமடைந்த லட்சுமி, குழந்தைவேலை கன்னத்தில் அறைந்துள்ளார். பின்னர், இருவரையும் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, லட்சுமி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, வீட்டின் அருகே தோட்டத்தில் வீசப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிந்து, தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் லட்சுமியை கொலை செய்தது குழந்தைவேல் என்பது தெரியவந்தது. டூவீலரில் வேகமாக சென்றது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், லட்சுமி தன்னை அடித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த லட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து, அவரது உடலை இழுத்து சென்று, அருகில் இருந்த தோட்டத்தில் வீசி விட்டு சென்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், ெபன்னாகரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Bennagaram ,Lakshmi ,Erangadu ,Dharmapuri district ,
× RELATED டூவீலர், செல்போனை எஸ்ஐ பறித்ததால் வாலிபர் தற்கொலை