×

பொறுப்பேற்ற ஒரேயொரு நாளிலேயே சிவகங்கை கலெக்டர் தூக்கியடிப்பு: 19 நாளில் மதுரை கலெக்டர் இடமாற்றம்

மதுரை: பொறுப்பேற்ற ஒரே நாளில் சிவகங்கை கலெக்டர், 19 நாளில் மதுரை கலெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக கூட்டணி ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டின் பல்வேறு பொறுப்புகளில் இருந்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை கலெக்டராக இருந்த பிரவீன்குமார், சமீபத்தில் நாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு கலெக்டராக இருந்த ஆகாஷ், மதுரை கலெக்டராக மாற்றப்பட்டார்.கடந்த 1ம் தேதி ஆகாஷ், மதுரை கலெக்டராக பொறுப்பேற்றார். சிவகங்கை மாவட்ட கலெக்டராக கடந்த 16ம் தேதி நிஷாந்த் கிருஷ்ணா மாற்றப்பட்டார்.

இவர் கடந்த 18ம் தேதி பிற்பகலில் பொறுப்பேற்றார். நேற்று முன்தினம் ஒருநாள் மட்டும் முழுமையாக சிவகங்கையில் கலெக்டராக பணியாற்றியுள்ளார். மறுநாள் காலை விடிந்ததும், அதாவது நேற்று காலையே அவர் மதுரை கலெக்டராக மாற்றப்பட்டார். இதேபோல், மதுரையில் கலெக்டராக பொறுப்பேற்று 19 நாட்களே ஆன நிலையில், கலெக்டர் ஆகாஷ், சிவகங்கைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். இது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரஸ்பரம் மதுரையில் இருந்து சிவகங்கைக்கும், அங்கிருந்து மதுரைக்கும் மாற்றம் என இருந்தாலும், ஒரே நாளில் இந்த மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக தவெக முக்கிய அமைச்சர்களின் தலையீடு ஏதும் உள்ளதா? கடந்த வாரத்தில் மதுரைக்கு அமைச்சர்கள் ஆய்வுக்கு வந்த நிலையில் அவர்கள் தரப்பில் ஏதேனும் குற்றம் காணப்பட்டதா என்ற சந்தேகங்கள் வருவாய்த்துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.

இரு நகரங்களுக்கும் இடையே வெறும் 44 கிமீ தூரம் தான் இடைவெளி உள்ளது. இதற்குள் இருவரும் பரஸ்பர மாற்றம் கேட்க வேண்டிய தேவையில்ைல. இருவருக்கும் மதுரை, சிவகங்கை சொந்த ஊர் என்ற எந்த தொடர்பும் இல்லை. இதனால், தவெக அரசில் தங்களுக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை பாகுபடுத்தி பார்க்கும் வகையில், இந்த இடமாறுதல்கள் இருக்கலாம் என வருவாய்த்துறையினர் கருதுகின்றனர்.

மதுரை கலெக்டராக ஆகாஷ், பொறுப்பேற்றதில் இருந்து கிராமம், கிராமமாக சென்று ஆய்வு பணிகளையும், தமிழர்களின் பாரம்பரிய சின்னங்களான சமணர் படுகைகள் அமைந்துள்ள பகுதிகளையும் ஆய்வு செய்து வருகிறார். இது ஆளுங்கட்சியினருக்கு பிடிக்காமல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதே நேரம் மதுரை மாவட்டம், திருமங்கலத்திலுள்ள தியாகி விஸ்வநாத தாசின் மணிமண்டபத்தில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 16ம் தேதி கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், பல்வேறு அமைப்பினரின் போராட்டத்திற்கு பிறகு வந்து மரியாதை செய்ததால் தவெக அரசுக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை மாற்றும் வகையில் மதுரை கலெக்டரை மாற்றியிருக்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

Tags : Sivaganga ,Madurai ,Collector ,IAS ,IPS ,Tamil Nadu ,Daveka ,
× RELATED டூவீலர், செல்போனை எஸ்ஐ பறித்ததால் வாலிபர் தற்கொலை