பாலக்கோடு: தர்மபுரியில் உள்ள தேர்வு மையத்தில் இன்று நடைபெறும் நீட் தேர்வை எழுத இருந்த மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள எண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கெலமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களின் மகள் ரோஷ்னி (18), கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் 2 முடித்து விட்டு, மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்ற கனவுடன், நாமக்கல் மாவட்டத்தில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்தார். இன்று நீட் மறுதேர்வு நடக்கவுள்ள நிலையில், சொந்த ஊருக்கு வந்த மாணவி, தர்மபுரியில் உள்ள மையத்தில் நீட் தேர்வை எழுத இருந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ரோஷ்னி மனஉளைச்சலுடன் சோர்வாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி ரோஷ்னி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவி நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வு அச்சத்தால், மாணவி ரோஷ்னி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை டாக்டர்னு கூப்பிட்டீங்க உங்க ஆசையை நிறைவேற்ற முடியல… தாய், தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம்
சேலம், ஜூன் 21: சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் வெள்ளாளபுரத்தை சேர்ந்தவர் சேகர் (45), இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களது மகள் கோபிகா (19), பிளஸ்-2 முடித்துவிட்டு, மருத்துவக்கல்வி பயில்வதற்காக நீட் நுழைவுத்தேர்வுக்கு படித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வெழுதிய அவர், தேர்ச்சி பெறவில்லை. நடப்பாண்டு 3வது முறையாக கடந்த மே 3ம் தேதி கோபிகா நீட் தேர்வை எழுதியநிலையில், அத்தேர்வு ரத்தானது. இதனால், நீட் மறுத்தேர்வை இன்று (21ம் தேதி) 4வது முறையாக எழுத தயாராகி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் கோபிகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோபிகாவின் உடலை சேலம் அரசு மருத்துவமனையில் இரவோடு இரவாக பிரேதப்பரிசோதனை செய்து, அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள், சேலம் காக்காயன் எரிவாயு தகன மேடைக்கு எடுத்துச் சென்று, இரவே தகனம் செய்தனர்.
இதனிடையே தற்கொலை செய்த மாணவியின் அறையில் இபோலீசார் சோதனையிட்டதில், கோபிகா தாய், தந்தைக்கு எழுதிய உருக்கமான ஒரு பக்க கடிதம் சிக்கியது. அதில், “டியர் மம்மி, டாடி… நான் எவ்வளவோ முயன்று படிக்கிறேன். ஆனால், என்னால் படிக்க முடியவில்லை. எல்லோரும் என்னை டாக்டர் டாக்டருனு கூப்பிட்டீங்க, ஆனால் உங்கள் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியல. தம்பியை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். நான் முடிவை தேடிக்கொள்கிறேன். மம்மி, டாடி மிஸ் யூ’’ என எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மாணவி கோபிகா எழுதிய இந்த உருக்கமான கடிதம் பற்றிய தகவல் அறிந்த உறவினர்கள் மிகுந்த சோகமடைந்துள்ளனர்.
கடந்த 4 நாட்களில் 3 மாணவிகள் தற்கொலை
நீட் மறுதேர்வு பயத்தால் தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 17ம் தேதியன்று கோவையைச் சேர்ந்த மாணவி அனு கீர்த்தனா தற்கொலை செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் சேலம் மாவட்டம் இடைப்பாடியைச் சேர்ந்த கோபிகா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று தர்மபுரியைச் சேர்ந்த ரோஷ்னி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
