×

மனுதாரர் மீது பொய் வழக்கு போட்டதாக புகார்; மணல் கொள்ளை விவகாரத்தில் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரை மாவட்டம், கள்ளிக்குடியை சேர்ந்த அருண்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருமங்கலம், கள்ளிக்குடி பகுதிகளில் வைகை ஆற்றின் துணை நதியான குண்டாற்றில் சட்ட விரோதமாக மணல் குவாரி அமைத்து, மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. நீதிமன்றம் தலையிட்டு இதை தடுக்கத் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. கள்ளிக்குடி வட்டாட்சியர் தாக்கல் செய்த அறிக்கையில், ‘‘அந்தப் பகுதியில் எவ்வித சட்டவிரோத மணல் குவாரியும் இல்லை’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுதாரர் அந்த பகுதிகளில் சட்டவிரோத மணல் குவாரி அமைத்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக புகைப்படங்களை சமர்ப்பித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் மதுரை கலெக்டர் தலையிட்டு தவறு செய்த அதிகாரிகள் மீது, தற்காலிகப் பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மனுதாரர் மீது உள்நோக்கத்துடன் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி, வழக்கு பொய்யானது என்றால் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு பதிவு குறித்து மதுரை எஸ்பி ஆய்வு செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு ஜூன் 25க்கு தள்ளி வைத்தார்.

Tags : Madurai ,Arun Kumar ,Kallikudi, Madurai district ,Gundara ,Vaigai river ,Thirumangalam ,Kallikudi ,
× RELATED டூவீலர், செல்போனை எஸ்ஐ பறித்ததால் வாலிபர் தற்கொலை