×

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் பக்தர்கள் மீது பணியாளர்கள் கொலைவெறி தாக்குதல்: சமூக வலை தளங்களில் வைரல் ஆகும் வீடியோ

உடன்குடி: உலகளவில் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா சிறப்பாக நடைபெறும் இடமாக தூத்துக்குடி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் திகழ்கிறது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் தற்காலிக பணியாளர்கள் அத்துமீறுவது, அவதூறான வார்த்தைகளால் பேசுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் சமீபகாலமாக அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு சிவப்பு நிற சுடிதார், சிவப்பு நிற வேட்டி, டிசர்ட் அணிந்த தம்பதி அம்மனை தரிசனம் செய்ய வந்தனர். அப்போது தற்காலிக பணியாளர்கள் பக்தர்களிடம் தவறாக பேசுவதை பார்த்து அவர்கள் தட்டிக் கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த புளு கலர் சட்டை அணிந்திருந்த தற்காலிக பணியாளர்கள் இருவர், தம்பதியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்க முயன்றனர். தம்பதியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த தூய்மைப் பணியாளர்கள் சிலர் திரண்டு வந்து தற்காலிக பணியாளர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை கடுமையாக தாக்கினர். தடுக்க வந்த அவரது கணவருக்கும் அடி உதை விழுந்தது. இத்தாக்குதல் சம்பவத்தை சிலர் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். அது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.

இதுகுறித்து விசாரித்த கோயில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதோடு காவல்துறையினரிடம் புகாரளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Tags : Kulasekaranpattinam Mutharamman Temple ,Udangudi ,Thoothukudi ,Dussehra ,Mysore ,
× RELATED டூவீலர், செல்போனை எஸ்ஐ பறித்ததால் வாலிபர் தற்கொலை