×

திருவாரூர் அருகே அரசு பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி: கேக் வெட்டி ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனத்தை சேர்ந்தவர் அகிலன்(35). தவெக மாவட்ட துணை செயலாளர். இவருக்கு நேற்றுமுன்தினம் பிறந்த நாள். இதையடுத்து கட்சியினருடன் நேற்றுமுன்தினம் நள்ளிரவு அதே பகுதியில் உள்ள இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளிக்குள் சென்று பள்ளி கட்டிடத்தின் முன்புறம் காலி இடத்தில் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். பள்ளியின் கேட் எப்போதும் திறந்தே இருக்கும். இதனால் இவர்கள் பள்ளிக்குள் சென்று பிறந்த நாள் கொண்டாடி உள்ளனர். இதை ரீல்சாகவும், புகைப்படங்களாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர். இவை தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் அகிலன், முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் ஊராட்சி எக்கல் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கட்சியினருடன் சென்று ஆய்வு செய்தார். அங்கிருந்த ஆசிரியர்களிடம் குடிநீர், சமையலறை வசதி மற்றும் கட்டிட பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வு வீடியோ மற்றும் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தவெக ஆட்சி அமைந்தது முதல் அக்கட்சியினர் அரசு அலுவலகங்களில், பள்ளிகளில் ஆய்வு செய்வது தொடர்கதையாக உள்ளது. மக்கள் பிரதிநிதிகளாக இல்லாதவர்கள் ஆய்வு பணியில் ஈடுபட கூடாது என்று தவெக பொது செயலாளர் ஆனந்த் அறிக்கை வெளியிட்டும் யாரும் கண்டுகொள்வதே இல்லை. தற்போது இடும்பாவனத்தை சேர்ந்த அகிலன், அரசு பள்ளி வளாகத்தில் பிறந்த நாள் கொண்டாடியதோடு, மற்றொரு அரசு பள்ளியில் அதிகாரி போல் ஆய்வும் மேற்கொண்டுள்ளார். எனவே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவெகவினரின் இதுபோன்ற கட்டுப்பாடற்ற செயல்களை அக்கட்சி தலைவரும், முதல்வருமான விஜய் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thaveka ,Tiruvarur ,Muthupettai ,Akilan ,Idumbavanam ,Tiruvarur district ,Idumbavanam Government Higher Secondary School ,
× RELATED தமிழகத்தில் உள்ள 46 கோயில்களின் உபரி...