சென்னை: உயிருக்கு எது நேர்ந்தாலும் நடிகர் சரவணன் தான் காரணம் என்று முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், பொய்யான புகார் அளித்திருப்பதாக 2வது மனைவியுடன் வந்து, முதல் மனைவி மீது நடிகர் சரவணன் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் சரவணன். இவர் போரூர் மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். சவரணன் மீது அவரது முதல் மனைவி சூர்யாஸ்ரீ மவுலிவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். அதில், கண்காணிப்பு கேமரா காட்சிகளை அகற்றி இருப்பதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கணவர் சரவணன் மீது குற்றம் சாட்டியிருந்தார். அந்த, புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று நடிகர் சரவணன், தனது 2வது மனைவி ஸ்ரீதேவி மற்றும் 9 வயது மகன் ஆகியோருடன், தன் மீது பொய்யான புகார் அளித்திருப்பதாக கூறி, முதல் மனைவி சூர்யாஸ்ரீ மீது தனது வக்கீல்களுடன் நேரில் சென்று, மவுலிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர், நடிகர் சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:
முதல் மனைவி சூர்யாஸ்ரீ யூடியூப்பில் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்துள்ளார். 12 ஆண்டுகளாக ஸ்ரீதேவியுடன் வாழ்ந்து வருகிறேன். எங்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவருக்கு 9 வயது ஆகிறது. முதல் மனைவியை கொலை செய்துவிட்டு, நான் ஜெயிலுக்கு சென்று களி திங்க முடியாது. என்னால் அவரது உயிருக்கு எந்த பிரச்னையும் வராது என்று சொல்வதற்காகத்தான் இந்த பேட்டி.
நான் மனைவி, மகனுடன் சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். எனக்கு மகன் ஒருவன் இருக்கிறான், மனைவி இருக்கிறார் என்பதற்காகவே இங்கு வந்துள்ளேன். எனக்கு 2வது திருமணம் செய்து வைத்ததே அவர்தான், என்னிடம் பணத்தை அபகரிக்கும் முயற்சியில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நான் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளேன். என்னிடம் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அதற்கு நான் மேல் முறையீடு செய்திருக்கிறேன்.
வீட்டின் கீழ் பகுதியில் கார் பார்க்கிங் உள்ளது. அதனை அபகரிக்க முயற்சி செய்கிறார். ராமமூர்த்தி என்பவர் சொல்லிக் கொடுத்து இதனை செய்து வருகிறார். அந்த வழக்கிலும் வெற்றி பெற்றுள்ளேன். வெளியூருக்கு சென்று இருந்தவர் திடீரென வந்து உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளித்துள்ளார். எங்களுக்கு திருமணம் செய்து வைத்தது சூர்யாஸ்ரீ தான். எங்களுக்கு பிறந்த குழந்தையை அவர் நன்றாகத் தான் கவனித்தும் வந்தார். நாங்கள் எங்கு சென்றாலும் 3 பேரும் ஒன்றாக வெளியே சென்று தான் வந்துள்ளோம். சிலரது பேச்சைக் கேட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், முதல் மனைவி மற்றும் 2வது மனைவியுடன் சரவணன் இருக்கும் புகைப்படம் மற்றும் குழந்தையை தூக்கி கொஞ்சுவது, மூன்று பேரும் காரில் செல்லும் புகைப்படங்கள் ஆகியவற்றை அவர் காண்பித்தார்.
