*புளியங்குடியில் பரபரப்பு
புளியங்குடி : புளியங்குடியில் செல்போன் பேசிக்கொண்டே ஓட்டியதால் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் 6 பேர் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
புளியங்குடியில் உள்ள வெவ்வேறு பள்ளிகளில் சொக்கம்பட்டி, சிங்கிலிபட்டி, புன்னையாபுரம் பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் புளியங்குடி பரமானந்தா பள்ளிதெருவை சேர்ந்த ராமசாமி (40) என்பவரது ஆட்டோவில் நேற்று காலை பள்ளிக்கு மாணவர்கள் 6 பேர் மற்றும் இரண்டு பெண் தொழிலாளர்கள் பயணம் செய்தனர்.
டிரைவர் செல்போன் பேசிக்கொண்டே ஆட்டோவை ஒட்டிக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது புன்னையாபுரம் பாலம் அருகே சென்றபோது சாலையில் திடீரென நாய் குறுக்கே வந்ததால் டிரைவர் ஆட்டோவை நிறுத்த முயன்றபோது எதிர்பாராத விதமாக ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோவில் வந்த பள்ளி மாணவர்கள் புளியங்குடியை சேர்ந்த தாமரை செல்வன் (15), சொக்கம்பட்டியை சேர்ந்த அகிலேஷ் (15), கவுசிக் (16), பிரக்தி (14), விகாஷ்குமார் (14) மற்றும் சொக்கம்பட்டியை சேர்ந்த பெண் தொழிலாளி ராக்கம்மாள், கோபிராஜ் (13) உள்பட 8 பேர் காயமடைந்தனர். டிரைவர் ராமசாமி, காயமின்றி தப்பினார்.
விபத்தை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலின் மாணவர்களின் பெற்றோர், 20க்கும் மேற்பட்டோர் புளியங்குடி அரசு மருத்துவமனையில் திரண்டனர். விபத்து குறித்து புளியங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
