ஈரோடு: ஈரோடு அதிமுக மாவட்ட செயலாளர் மனோகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பேனர்களை அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக மனோகரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஈரோடு காந்திஜி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடந்த 13ம் தேதி ஈடுபட்டனர். அதிமுக பேனர்களை அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக மாவட்ட செயலாளர் மனோகரன் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பன்னீர் செல்வம் பூங்கா அருகே இருபுறமும் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி பேனர்களை அவர்கள் அகற்றினர்.
அங்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பேனர்களை அதிகாரிகள் பாதுகாப்பாக அவிழ்த்து வைத்த நிலையில், அதிமுக பேனர்களை மட்டும் உடைத்து அப்புறப்படுத்தியதால், அங்கு வந்த அதிமுக மாவட்ட செயலாளர் மனோகரன் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா? பேனர்களை அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வது ஏன்? என்று அவர் அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார். மேலும், ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து எங்களுக்கு முன்கூட்டியே தகவல் சொல்லி இருந்தால், நாங்களே அந்தப் பேனர்களை அப்புறப்படுத்தியிருப்போம். ஆனால் எந்தவொரு முன்னறிவிப்பும் தெரிவிக்காமல், ஆளுங்கட்சிப் பேனர்களைப் பாதுகாப்பாகக் கழற்றி வைத்துவிட்டு, எதிர்க்கட்சியான அதிமுகவின் பேனர்களை மட்டும் உடைப்பது ஏன்?” என்று மனோகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் மனோகரன் மற்றும் அதிமுகவினரைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்த நிலையில், தற்போது அவர் மீது ஈரோடு நகர காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
