கணவர் 2வது திருமணம் செய்ய முயற்சி காதல் திருமணம் செய்த பெண் வக்கீல் குழந்தையுடன் தர்ணா

*5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

புளியங்குடி : புளியங்குடி மேல மந்தை தெருவை சேர்ந்த நாகராஜ் மகள் மஞ்சுபிரியா (24). வக்கீலான இவர் கடந்த 2024ம் ஆண்டு சென்னையில் சட்டப்படிப்பு படித்த போது சென்னையில் செல்போன் கடையில் மேலாளராக பணியாற்றி வந்த புளியங்குடி ஜின்னாநகரைச் சேர்ந்த ஜெய்னுலாதீன் மகன் முகம்மது இத்ரிஸ் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

இதையடுத்து இருவரும் கடந்த 2024ம் ஆண்டு புளியங்குடி ஜமாத்தார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இதற்காக மஞ்சுபிரியா மதம் மாறி தனது பெயரை தன்சீலா என்று மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.

இதனிடையே தன்சீலாவை அவரது கணவர் குடும்பத்தினர் ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் காதல் கணவருக்கு அவரது பெற்றோர், வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்க முயன்றனர். இதையொட்டி முகம்மது இத்ரிஸ், கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து புளியங்குடி வந்தார். அவருக்கு 2வது திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருவதாக தன்சீலாவுக்கும் தகவல் கிடைத்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த தன்சீலா, தனது கைக்குழந்தையுடன் புளியங்குடியில் உள்ள முகம்மது இத்ரிஸ் வீட்டின் முன் அமர்ந்து கடந்த 16ம் தேதி தர்ணாவில் ஈடுபட்டார். ஆனால் கணவர் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் தன்சீலா மற்றும் அவரது குழந்தையை ஏற்க மறுத்து அங்கிருந்து வலுக்கட்டாயமாக அவரை வெளியேற்றினர். இதையடுத்து கணவர் வீட்டார் ஏற்க மறுத்தது குறித்து தன்சீலா மற்றும் அவரது குடும்பத்தினர் புளியங்குடி ஜமாத்தில் முறையிட்டனர்.

அப்போது அவர்கள், நீதிமன்றம் மூலம் தீர்வு காணுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து மனைவி மற்றும் குழந்தையை ஏற்க மறுத்து 2வது திருமணம் செய்ய முயன்ற முகம்மது இத்ரிஸ் மற்றும் குடும்பத்தினர் மீது தன்சீலா புளியங்குடி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.

இதனிடையே கணவர் முகம்மது இத்ரிஸ் மற்றும் அவரது வீட்டார் தன்னை தாக்கியதாக கூறி தன்சீலா புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் இந்திரா வழக்கு பதிந்து தன்சீலாவின் கணவர், மாமனார், மாமியார் உள்பட உறவினர்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இளம்பெண்ணின் போராட்டத்தால் முகம்மது இத்ரிஸ் 2வது திருமணம் தடைபட்டது.

காதல் திருமணம் செய்த இளம் பெண் வக்கீல் கணவர் வீட்டு முன் குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: