கும்மிடிப்பூண்டி- சென்னை வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புறநகர் பகுதியில் எண்ணூர் அருகே பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலில் மின்சார உபகரணத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, தற்போது கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லக்கூடிய வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது.

இதனால் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி வரும் தடத்தில் புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் ஒரே டிராக்கில் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டு, ரயில் சேவை முடங்கியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில்களில் பயணிகள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

புறநகர் ரயில்கள் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.வெளிமாநில ரயில்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. நீண்ட நேரமாக ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் அருகே உள்ள ரயில் நிலையங்களை நோக்கி பயணிகள் நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. அபாயம் அறியாமல் பயணிகள் தண்டபாலத்தை கடந்து வருகின்றனர். இதனிடையே ரயில்வே தொழில்நுட்பக் குழுவினர் ரயிலில் ஏற்பட்டுள்ள கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: