ஆள் பிடிக்கும் வேலை செய்கிறார் ஆதவ் அர்ஜூனா சி.வி.சண்முகத்துக்கு எம்பி பதவி எடப்பாடி போட்ட பிச்சை: அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பளீர்

திருவண்ணாமலை: ஆதவ் அர்ஜூனா ஆள்பிடிக்கும் வேலை செய்கிறார். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எம்பி பதவி எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சை என்று அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். திருவண்ணாமலையில் அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ் கிருஷ்ணமூர்த்தி நேற்று அளித்த பேட்டி: அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சி.வி.சண்மும் முயற்சி செய்கிறார். அதிமுகவில் பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் மட்டுமே கட்சியை விட்டு செல்கின்றனர். தொண்டர்கள் யாரும் செல்லவில்லை. அதிமுக-திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்ததாக தொடர்ந்து பொய் கூறி வருகிறார்.

கடந்த தேர்தலில் 195 தொகுதிகளுக்கு சென்று திமுகவுக்கு எதிராக பிரசாரம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. தேர்தலில் அதிமுக 47 இடங்களிலும், 6 இடங்களில் கூட்டணி கட்சிகளும் வென்றுள்ளது. பாமக துணையுடன்தான் வடமாவட்டங்களில் அதிமுக வென்றது என கூறுகிறார். கடந்த 2021 தேர்தலில் பாமக கூட்டணியில் இருந்தபோதும் சி.வி.சண்முகம் ஏன் விழுப்புரம் தொகுதியில் வெற்றிபெறவில்லை.

அதேபோல், தவெகவை ஆட்கொள்ள வேண்டும் என முனைப்போடு செயல்பட்டுக்கொண்டிருக்கிற ஆதவ் அர்ஜூனாவும், அதிமுகவை தொடர்ந்து விமர்சித்து பேசிவருகிறார். அவர் அமைச்சரே அல்ல. ஆள் பிடிக்கும் வேலை செய்து வருகிறார். பதவி வரும்போது பணிவு வர வேண்டும். நாவடக்கத்துடன் பேச வேண்டும். ஆணவத்தால், அகங்காரத்தால், ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, குதிரை பேரம் நடத்தி இழுத்துக்கொண்டிருப்பது மக்களுக்கு தெரியும். தவறை திருத்திக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அதிமுக தொண்டர்கள் கொதித்து எழுவார்கள்.

அதிமுகவின் தொடர் தோல்விக்கு சி.வி.சண்முகத்தின் ஆலோசனையை கேட்டதுதான் முக்கிய காரணம். தன்னை வளர்த்த இயக்கத்தை பார்த்து குறை கூற அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?. அவரது மாவட்ட செயலாளர் பதவியை ஜெயலலிதா பறித்தார். அதன்பிறகு, அவருக்கு மீண்டும் மாவட்ட செயலாளர் பதவியை பிச்சை போட்டது எடப்பாடி பழனிசாமிதான். அதேபோல் கெஞ்சி கேட்டதால் அவருக்கு மாநிலங்களவை எம்பி பதவியை பிச்சை பேட்டார். இப்படிப்பட்ட சி.வி.சண்முகத்திற்கு, எடப்பாடி பழனிசாமியை குறை கூற என்ன யோக்கியதை உள்ளது. குடும்ப அரசியல் பற்றி பேசும் சி.வி.சண்முகம்தான், விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப அரசியல் செய்கிறார்.

தவெக அமைச்சர்கள் அரசியல் பற்றி எதுவும் தெரியாமல் உளறி கொண்டிருக்கிறார்கள். தவெக பின்னணியில் சி.வி.சண்முகம் செயல்படுகிறார். இவர், தற்போது அதிமுகவில் உறுப்பினர் மட்டுமே, எவ்வித பதவியிலும் இல்லை. சட்டத்துறை அமைச்சராக இருந்தவருக்கு கொழுத்த கனிமவளத்துறையை கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. யார் மீதும் நடவடிக்கை எடுக்க அஞ்சாதவர் எடப்பாடி. சி.வி.சண்முகம் திருந்துவதற்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். மாவட்டம் வாரியாக கட்சியினரிடம் எடப்பாடி கருத்து கேட்க வருகிறார். அதன்பிறகு செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி தோல்விக்கான காரணம் குறித்து அறிவிப்பார்.

குதிரை பேரத்தின் மூலம் பலகோடி ரூபாய் பெற்றுக்கொண்டு அதிமுகவில் இருந்து விலகிய மரகதம் குமரவேல், அதிமுகவை பற்றி பேச அருகதையற்றவர். வாக்களித்த மக்களின் விரலில் மை காய்வதற்குள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர். மக்களை சந்திக்க தைரியம் இல்லாதவர். அதிமுகவால் அடையாளம் காட்டப்பட்டவர் செங்கோட்டையன். அவர் வகிக்கும் பதவிக்கும், வயதுக்கும் ஏற்றபடி நிதானத்துடன் பேச வேண்டும். இந்த பதவிக்காக தரம் தாழ்ந்து பேசுவது உகந்தது அல்ல. அதிமுக மூழ்கும் கப்பல் அல்ல. மூழ்கும் படகில் அவர்தான் தொற்றிக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: