4 அதிமுக சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை கோரி அதிமுக வழக்கு

 

 

சென்னை: நான்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் காலியாகவுள்ள தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி அதிமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. கடந்த மே 13ம் தேதி பெரும்பான்மை வாக்கெடுப்பின் போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அவர்களுக்கு எதிராக கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார். இந்த சூழ்நிலையில், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். அவர்களின் ராஜினாமா கடிதங்களை அன்றைய தினமே சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். அரசிதழிலும் வெளியிடப்பட்டது. தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த போது மூன்று அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அதன் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘‘தகுதி நீக்க நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள போது, அதனை தவிர்க்கும் வகையில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததை ஏற்க முடியுமா? என்ற அரசியல் சாசன கேள்வி எழுந்துள்ளது. தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ள போது, ராஜினாமா கடிதங்களை ஏற்றுக் கொண்டது கட்சித் தாவல் தடை சட்டத்தையும், மக்கள் தீர்ப்பையும் நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உள்ளது. கட்சித் தாவல், ராஜினாமா காரணமாக அடுத்தடுத்து தேர்தல்கள் நடத்த வேண்டியுள்ளதால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. 3 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுக்களை விசாரித்து, முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வு விசாரணைக்குவந்தது. அப்போது அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபால் ஆஜராகி, ‘இந்த வழக்கில் நாங்களும் இணைந்து கொள்ள மனு தாக்கல் செய்துள்ளோம். மேலும், இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையாவையும் சேர்த்து 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் கட்சி தாவல் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கையை சபாநாயகர் எடுக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளோம்’ என்றார். அப்போது குறுக்கிட்ட அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘4 சட்டமன்ற உறுப்பினர்களும் தானாக தான் முன்வந்து ராஜினாமா செய்தார்கள். இது குறித்து சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளளார். சட்டமன்ற விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இயற்கை நீதிக்கு உட்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளை மறுதினம் ஒத்திவைத்தனர்.

 

Related Stories: