நெல்லை: கடந்த கோடை காலத்தில் சமூக ஆர்வலர்கள் மூலமாக தாமிரபரணி ஆற்றில் டன் கணக்கில் துணிகளையும் மற்றும் அதைச் சார்ந்த குப்பைகளையும் அள்ளினார்கள். இதன் தொடர்ச்சியாக பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் துணிகளை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளையும் தண்ணீரில் போட்டால் போட்டவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமீபத்தில் ஆய்வு செய்த கலெக்டர் ஆனந்த் மோகன் நகராட்சி நிர்வாகிகளிடம் கூறி சென்றார். அதன்படி நகராட்சி நிர்வாகிகள் ஆற்றில் துணி போடுபவர்கள் மீது அபராதம் விதித்தும் அபராதம் கட்ட மறுப்போர்கள் மீது காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்நிலையில் தொடர் கண்காணிப்பு இல்லாததால் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் சிலர் குப்பைகளையும் துணிகளையும் ஆற்றில் வீசி வருவதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது. ஆகவே பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி துணிகளையும் மற்றும் குப்பைகளையும் வீசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கவின்றனர்.
