திண்டுக்கல், ஜூன் 15: பாதுகாக்கப்படாத குடிநீரினால் தயாரிக்கப்படும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு உருவாக்கும் உணவுப் பொருட்களை பொதுமக்கள் உட்கொள்ள வேண்டாம் என உணவு பாதுகாப்புத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: பாதுகாக்கப்படாத குடிநீரினால் தயாரிக்கப்படும், ஐஸ்கட்டிகளைக் கொண்டு உருவாக்கும் குளிர்பானம், பழச்சாறு, சர்பத் போன்றவற்றை உட்கொள்வோருக்கு தொற்று நோய் வரவாய்ப்பு உள்ளது. தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் பெரியவகை ஐஸ்கட்டிகள், கடல் உணவு மற்றும் மலர் அங்காடிகளில் உணவு மற்றும் மலர்களை பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் பெரியவகை ஐஸ்கட்டிகளை மறுசுழற்சியாக விற்பனை செய்யக்கூடாது.
ஐஸ் கட்டிகள் விலைக் குறைவானது என்பதற்காக சில்லரை மற்றும் சாலையோர வியாபாரிகள் இதனை பொதுமக்கள் உட்கொள்ளும் உணவுகளில் சேர்க்கக்கூடாது. இவ்வாறான ஐஸ்கட்டிகளால் தொண்டை பாதிப்பு, சளி மற்றும் இருமல், மஞ்சள் காமாலை, காலரா போன்ற பல்வேறு வகையான தொற்று நோய் பாதிப்பு ஏற்படும். பொதுமக்கள் உட்கொள்ளக் கூடிய ஐஸ் உணவு, பாதுகாப்பு தரங்கள் சட்டம் மற்றும் விதிகள் படி நுண்ணுயிரியல் தரத்தினை கொண்டிருக்க வேண்டும்.
உட்கொள்ளக் கூடாத ஐஸ் வகைகளை அறிந்து கொள்ள ஏதுவாக தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகளின் நிறத்தை நீலநிறமாக வேறுபடுத்திக் காட்டவும், இதுபோன்ற ஐஸ்கட்டிகள் உற்பத்தி செய்பவர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் உரிமம் பெறவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐஸ்கட்டிகளை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க வேதிப்பொருட்கள் கலப்போர் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
