தலைமறைவு ரவுடிகள் இருவர் கைது

 

அண்ணாநகர், ஜூன் 19: அண்ணாநகரில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இரு ரவுடிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சிலம்பரசன்(18) என்பவரை கடந்த 2022ம் ஆண்டு சிலர் கத்தியால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அண்ணாநகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஜோஸ்வாராய் (20) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், 2022ம் ஆண்டு சிறையில் இருந்து வெளிவந்த ஜோஸ்வாராய் சென்னை, அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்திலுள்ள 21வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் கடந்த 10ம் தேதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில், அண்ணா நகர் போலீசார் ஆயிரம் விளக்கு பகுதியில் ஜோஸ்வாராயை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல், கடந்த 2023ம் ஆண்டு குமரன்நகர் பகுதியில் விஜய் (27) என்பவரை சிலர் கத்தியால் குத்திய வழக்கில் மேற்கு மாம்பலத்தை சேர்ந்த சரவணன்(29) என்பவரை குமரன் நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நீதிமன்ற பிணையில் வெளியே வந்த சரவணன், சென்னை, அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்திலுள்ள 21வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். அதனால் கடந்த 3ம் தேதி அவரை கைது செய்து ஆஜபடுத்த பிடியானை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் குமரன் நகர் போலீசார் சரவணனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: