திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த குரும்பலை சேர்ந்தவர்கள் திவாகரன்(27), ஐயப்பன்(24), பிரகாஷ்(49), விஜயன்(36). நண்பர்களான 4 பேரும் நேற்றுமுன்தினம் இரவு மணலியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினர். அப்போது குன்னூர் பாப்பாகுளத்தை சேர்ந்த சதீஷ்குமார்(30), மணலி மேலவெளி ரஞ்சித்குமார்(30) ஆகியோரும் மது அருந்தினர்.
இரு தரப்பினரும் அங்கிருந்து புறப்பட்ட போது சதீஷ்குமாரின் பைக் கீழே விழுந்து கிடந்தது. திவாகரன் தரப்பினர் தான் பைக்கை கீழே தள்ளி விட்டிருப்பார்கள் என்று நினைத்துஅவர்களிடம் சதீஷ்குமார் தரப்பினர் கேட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சதீஷ்குமாரின் நண்பர்கள் சிலர் அரிவாள், கத்தியுடன் சம்பவ இடத்துக்கு வந்து திவாகரன், ஐயப்பன், பிரகாஷ், விஜயன் ஆகியோரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர்.
இதில் படுகாயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
