மாநில அரசின் மானியத்தொகை 2 மாதங்களாக வராததால் 487 பேரூராட்சிகளில் நிதி நெருக்கடி: ஊழியர்களுக்கு சம்பளம், மின் கட்டணம் செலுத்த பணம் இல்லை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பேரூராட்சிகளுக்கு மாநில அரசு வழங்க வேண்டிய நிதி கடந்த 2 மாதங்களாக வழங்கப்படாததால் குடிநீர், மின்கட்டணம் செலுத்த முடியாமல் நிதி நெருக்கடியில் பேரூராட்சிகள் சிக்கித் தவித்து வருகின்றன. மேலும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவது கூட சிக்கலாகி உள்ளது. நிதி வர மேலும் தாமதமானால் பேரூராட்சி நிர்வாகம் முடங்கும் நிலை உருவாகும் என்று உள்ளாட்சி பிரதிநிதிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகர்ப்புறங்களில் 37.70 கோடி மக்கள் (31.14 சதவீதம்) வசிக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் 3 கோடியே 49 லட்சத்து 50 ஆயிரம் பேர் (48.45 சதவீதம்) நகர்ப்புறங்களில் வகிக்கின்றனர். தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் அமைந்துள்ள உள்ளாட்சிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழும், ஊரக உள்ளாட்சிகள் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கும். ஊரக உள்ளாட்சிகளில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகியவை அடங்கும். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சிகளை பொறுத்தவரை சென்னை பெருநகர மாநகராட்சி உள்பட 25 மாநகராட்சிகளும், 137 நகராட்சிகளும், 487 பேரூராட்சிகளும் இயங்கி வருகின்றன. பொதுவாக மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு சொத்து வரி வசூல், குடிநீர் கட்டணம் ஆகியவை முக்கிய வருவாயாகும்.

குடியிருப்புகள், வணிக வளாகங்களில் கிடைக்கும் சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு வருவாய் கிடைக்கிறது. இதுதவிர மாநகராட்சி வணிக வளாகங்கள், பஸ் ஸ்டாண்ட் மூலம் கிடைக்கும் வாடகை, அங்குள்ள வணிக வளாகங்கள் மூலம் கிடைக்கும் வாடகை, தினசரி சந்தைகள் மூலம் கிடைக்கும் வருவாய் ஆகியவை முக்கிய வருவாய் வழிகளாகும். எனினும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு இந்த நிதி வருவாய் மட்டும் போதாது.

மக்கள் செலுத்தும் வரிப்பணம், ஜிஎஸ்டி வருவாய் மூலம் ஒன்றிய அரசுக்கு வரி வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாயில் மாநிலங்களுக்கு நிதி பகிர்வு அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு துறைக்கும் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. பொதுவாக ஒரு நிதி ஆண்டு என்பது ஏப்ரல் முதல் மார்ச் வரையாகும். ஏப்ரல் முதல் காலாண்டு என கருதப்படும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சிகளான மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் பெரிய வரி வருவாய் இருக்காது.

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 479 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளில் 28 லட்சத்து 71 ஆயிரத்து 871 பேர் குடியிருப்புகளுக்கு சொத்து வரி செலுத்துகின்றனர். மேலும் 10 லட்சத்து 6 ஆயிரத்து 400 பேர் குடிநீர் கட்டணம் செலுத்துகின்றனர். இதுதவிர 13 லட்சத்து 65 ஆயிரத்து 68 பேர் தொழில் வரி செலுத்துகின்றனர். சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு ஏப்ரல், மே மாதங்களில் பேரூராட்சிகளுக்கு அரசிடம் இருந்து வர வேண்டிய மாநில நிதி பகிர்வு மானியத் தொகை இதுவரை வரவு வைக்கப்படவில்லை.

இந்த நிதியை வைத்து தான் பணியாளர்களின் சம்பளம், தெருவிளக்குகளுக்கு மின் கட்டணம், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும். குடிநீருக்கு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணம் உள்ளிட்டவற்றிற்கு செலவு செய்யப்படுவது வழக்கம். ஒவ்வொரு பேரூராட்சிக்கும் மக்கள் தொகை அடிப்படையில் மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சமும், மக்கள் தொகை அதிமுள்ள பேரூராட்சிகளுக்கு அதற்கு அதிகமாகவும் நிதி வரவு வைக்கப்படும்.

இதன் மூலம் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக இந்நிதி வரவு வைக்கப்படவில்லை. இதனால் பல பேரூராட்சிகளில் பணியாளர்களுக்கு சம்பளப் பணத்தை கூட வழங்க முடியாத நிலை உள்ளது. குடிநீர் கட்டணம் குடிநீர் வடிகால் வாரியத்திற்கும், மின்சார கட்டணம் மின்வாரியத்திற்கும் செலுத்தப்பட வேண்டிய நிலையில் அவை இரண்டும் அரசுத் துறைகள் என்பதால் அவர்களிடம் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் கால அவகாசம் கேட்டுள்ளனர்.

புதிய அரசு பொறுப்பேற்று கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னமும் நிதி வராத காரணத்தால் தமிழகம் முழுவதும் பேரூராட்சிகளில் அடிப்படை பணிகள் முடங்கிக் கிடக்கிறது. நிதி ஆதாரம் வலுவாக உள்ள சில பேரூராட்சிகளில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கியுள்ள நிலையில், நிதி ஆதாரம் குறைந்த பேரூராட்சிகளில் பணியாளர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்க முடியாத நிலை நீடிக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த மே 4ம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானது.

இதில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து வெற்றி பெற்ற காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் கடந்த மாதம் 10ம் தேதி புதிய அரசு பொறுப்பேற்றது. விஜய் முதல்வராக பொறுப்பேற்றார். ஏற்கனவே 2 மாதங்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் கழிந்து விட்ட நிலையில், புதிய அரசு பொறுப்பேற்று கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகியும், வருகிற 18ம் தேதி தான் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்குகிறது. இதை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரும், மானிய கோரிக்கைகள் தாக்கலும் நடைபெறும்.

எனவே உள்ளாட்சிகளுக்கு எப்போது நிதி பகிர்வு கிடைக்கும். ஒரு மாதம் தாண்டினால் அதுவரை ஊழியர்கள் சம்பளம், மின் கட்டணம், குடிநீர் கட்டணத்தை எப்படி சமாளிப்பது, மக்களுக்கு தேவையான அத்யாவசிய தேவைகளை எப்படி நிறைவேற்றுவது என அதிகாரிகள், உள்ளாட்சி நிர்வாகங்கள் திண்டாடி வருகின்றன. நிர்வாகத் திறமையின்மை காரணமாக தமிழக அரசு திணறிவரும் நிலையில் உள்ளாட்சிகளுக்கு நிதி வழங்காமல் இருப்பதால், கிராமங்களும் முடங்கும் சூழ்நிலை ஏற்படும் என்று பொதுமக்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

* யாரிடம் சொல்வது?
புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் நிலையில் புதிய அமைச்சர்கள் என்பதால் அமைச்சர்களுக்கு துறைகளின் நிலை குறித்த முழு விவரமும் தெரியாத நிலை உள்ளது. ஒரு சில மூத்த அதிகாரிகள் இதுகுறித்து அமைச்சர்களிடம் சுட்டிக்காட்டினாலும், அந்தத் துறையின் முக்கியத்துவத்தை அமைச்சர்கள் உணரவில்லை. இதனால் துறையின் நிலவரத்தை முதல்வரிடம் சொல்வதா, அமைச்சர்களிடம் சொல்வதா என தெரியாமல் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளிடம் கேள்வி எழுந்துள்ளது.

அதே நேரத்தில் முதல்வரிடம் பிரச்னையை கொண்டு சென்றால் துறை அமைச்சரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் அமைதியாக உள்ளனர். உள்ளாட்சியைப் பொறுத்தவரை புஸ்ஸி ஆனந்திடம்தான் உள்ளது. அவருக்கும் போதிய நிர்வாக திறமை இல்லை. அவர் கட்சி அலுவலகத்திலும், முதல்வர் விஜய் செல்லும் இடங்களுக்கு செல்வதிலேயே நேரம் செலவாகிறது. இதனால் உள்ளாட்சியை கலைக்கும் நோக்கத்திற்காக பணம் வழங்காமல் இருக்கிறார்களா என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

* நிதித்துறை மவுனம்
பொதுவாக நிதித்துறையில் இருந்துதான் ஒவ்வொரு துறைக்கும் நிதி பகிர்வு அளித்து உத்தரவிடப்படும். இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகியவை மக்களிடம் நேரடி தொடர்பில் உள்ள துறைகளாகும். அது மட்டுமல்லாது பொதுமக்களின் அத்தியாவசிய பணிகளையும் மேற்கொள்வது இந்த இரண்டு துறைகள் தான்.

பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள, அத்தியாவசிய பணிகளை செயல்படுத்த வேண்டிய இந்த துறைகளுக்கு நிதித் துறையில் இருந்து நிதி பகிர்வு அளிக்கப்படாத நிலையில் மற்ற துறைகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. இதே நிலை நீடித்தால் அரசு நிர்வாகம் முடங்கிப் போகும் என மூத்த அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

Related Stories: