பெரும் துயரம்: தமிழ்நாட்டில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 8 மாணவர்கள் உயிரிழந்ததால் சோகம்

மன்னார்குடி: தமிழ்நாட்டில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 8 மாணவர்கள் உயிரிழந்ததால் சோகம் ஏற்பட்டுள்ளது. மன்னார்குடி சாலை விபத்தில் 4 மாணவர்களும், உளுந்துர்பேட்டையில் 2 மாணவர்களும், தூத்துக்குடியில் 2 மாணவர்களும் உயிரிழந்தனர்.

திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை என்ற பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி முடிந்து மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக சாலையோரம் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது வேகமாக மோதியது.இந்த விபத்தில் 4 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் உலகநாதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மோதி 4 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உளுந்தூர்பேட்டை
அதேபோல் உளுந்தூர்பேட்டை அருகே நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் பகுதியில் நெடுஞ்சாலையில் ஒரே பைக்கில் சென்ற 5 பள்ளி மாணவர்கள் பள்ளி முடிந்து வீடி திரும்பும் போது எதிரே வந்த கார் மோதி இரு மாணவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த துயரம் ஏற்பட்டது. இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஜஸ்டின், புருனோ ஆகிய இரு தனியார் பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். ஆலன், சுஜித், அஜய் ஆகிய 3 மாணவர்கள் படுகாயத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாலை விபத்து நடைபெற்ற மேட்டத்தூர் பகுதியில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளதால், தேசிய நெடுஞ்சாலையில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி
மேலும் கருங்குளம் அருகே தனியார் பேருந்து – பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற இளைஞர்கள் இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த அங்கப்பன் (26) மற்றும் இசக்கிமுத்து (19) இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: