புகையிலை பழக்கத்திலிருந்து மீள்வோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய சூழலில் உலகளவில் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தல்களில் புகையிலையும் ஒன்றாக உள்ளது. புகைப்பிடிப்பதாலும் புகையிலை தொடர்பான நோய்களாலும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழக்கின்றனர். ஒவ்வொரு சிகரெட்டின் பின்னாலும் புகை மட்டும் இல்லை – அது நுரையீரல், இதயம், மூளை மற்றும் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் மெதுவாக பாதிக்கிறது என்கிறார், நுரையீரல் சிறப்பு மருத்துவர் மாளவிகா. இது குறித்து அவர் விரிவாக கூறுகையில், ஒரு நுரையீரல் மருத்துவராக, புகையிலையால் ஏற்படும் பாதிப்பாக மூச்சு விட, நடக்க, தூங்க அல்லது நிம்மதியாகப் பேச முடியாமல் சிரமப்படும் நோயாளிகளை நான் தொடர்ந்து சந்திக்கிறேன்.

அவர்களில் பலர் ஒருகாலத்தில், புகைப்பிடிப்பவராக இருந்துள்ளனர். அதேசமயம், அவர்கள் இப்போது கூறுவது, “நான் எப்போதாவது தான் புகைப்பிடிக்கிறேன்” அல்லது “என்னால் எப்போது வேண்டுமானாலும் இதை நிறுத்த முடியும்” என்று நம்பியவர்கள் தான். ஆனால், புகையிலை பழக்கத்தை நிறுத்த முடியாமல் தொடர்ந்த காரணத்தால் பல்வேறு உடல் நலப் பிரச்னைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

உலக புகையிலை ஒழிப்பு தினம்

என்பது ஒரு சுகாதாரப் பிரச்சாரம் மட்டுமல்ல. நமது நுரையீரலைப் பாதுகாப்பது என்பது உயிரையே பாதுகாப்பதைக் குறிக்கும் என்பதற்கான நினைவூட்டல் ஆகும்.“புகையிலை” என்ற வார்த்தையைக் கேட்டால், மக்கள் பொதுவாக சிகரெட்டை மட்டுமே நினைக்கிறார்கள். ஆனால் புகையிலை சிகரெட்டுகள், பீடிகள், சுருட்டுகள், ஹுக்கா மற்றும் ஷிஷா, பான் மசாலா மற்றும் மெல்லும் புகையிலை, குட்கா மற்றும் கைனி போன்ற வடிவங்களில் உள்ளது.

இ-சிகரெட்டுகள் மற்றும் வேப்பிங் சாதனங்கள்

இந்த அனைத்து தயாரிப்புகளிலும் நச்சு ரசாயனங்கள் மற்றும் அடிமையாக்கும் நிக்கோடின் உள்ளது. புகையிலையில் பாதுகாப்பான வடிவம் என்று எதுவும் இல்லை. “குறைவாகப் புகைப்பிடிப்பது”, “நண்பர்களுடன் புகைப்பிடிப்பது” அல்லது “வார இறுதியில் மட்டும் புகைப்பிடிப்பது” கூட காலப்போக்கில் நுரையீரல் மற்றும் ரத்த நாளங்களை பாதிக்கும்.

நமது நுரையீரல் சுத்தமான காற்றை சுவாசிக்கவே உருவாக்கப்பட்டுள்ளது. புகையிலையில் ஆயிரக்கணக்கான தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன, அவை மென்மையான நுரையீரல் திசுக்களை வீக்கமடையச் செய்து அழிக்கின்றன.

புகைப்பிடிப்பவர்களில் பலர் காலை நேர இருமல் அல்லது வேலை செய்ய முடியாமல் சோர்வடைவது போன்ற ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகளைப் புறக்கணிக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, அறிகுறிகள் தீவிரமடையும் போது, ​​நுரையீரலில் நிரந்தர பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.புகையிலை தொடர்பான பொதுவான நோய்களில் ஒன்று நாள்பட்ட அடைப்புக்குரிய நுரையீரல் நோய் ஆகும். இதன் காரணமாக தொடர் இருமல், அதிக சளி உருவாக்கம், படிக்கட்டுகளில் ஏறுவதில் சிரமம், ஓய்வில் இருக்கும்போது கூட கடுமையான மூச்சுத் திணறல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

உலகளவில் மிகவும் ஆபத்தான புற்றுநோய்களில் ஒன்றாக நுரையீரல் புற்றுநோய் உள்ளது, மேலும் புகைப்பிடிப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். மறைமுகமாக புகையை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா பாதிப்புகள், அடிக்கடி ஏற்படும் வீஸிங், நுரையீரல் நோய்த்தொற்றுகள், நுரையீரலின் வளர்ச்சி குறைதல், காது நோய்த்தொற்றுகள் போன்றவை ஏற்படுகிறது. புகையிலை புகையை சுவாசிக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, தாய்க்கும் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இ-சிகரெட்டுகள் மற்றும் வேப்பிங் தயாரிப்புகளும் மிகவும் ஆபத்தானவையாகும்.புகைப்பிடித்தல் முழு உடலையும் பாதிக்கிறது. இதன் காரணமாக மாரடைப்பு, பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் சிக்கல்கள், காசநோயின் (TB) தீவிரம், மலட்டுத்தன்மை, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், காயங்கள் மெதுவாக ஆறுதல் போன்றவை ஏற்படுகிறது.

புகையிலையை நிறுத்திய பிறகு…

24 மணி நேரத்திற்குள்: கார்பன் மோனாக்சைடு அளவு குறைகிறது. சில வாரங்களில் சுவாசம் மேம்படுகிறது. சில மாதங்களில்: இருமல் குறைகிறது. சில ஆண்டுகளில்: இதய நோய் மற்றும் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து கணிசமாகக் குறைகிறது

குடும்பத்தினரின் ஊக்கம்

மருத்துவ வழிகாட்டுதல் மூலம் வெற்றி விகிதங்களை பெரிதும் மேம்படுத்த முடியும். புகையிலை பழக்கத்திலிருந்து விடுபட உதவி கேட்பதில் யாரும் வெட்கப்படக் கூடாது.

இளைஞர்களுக்கான ஒரு செய்தி

இன்றைய தலைமுறையினர் கவர்ச்சிகரமான பேக்கிங், சுவையூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் உண்மையான தைரியம் என்பது புகைப்பிடிப்பதிலோ அல்லது வேப்பிங் செய்வதிலோ இல்லை.உண்மையான தைரியம் என்பது: உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது ஆகும். அந்தவகையில், ஆண்டு தோறும் மே 31 அன்று அனுசரிக்கப்படும் உலக புகையிலை ஒழிப்பு தினத்தில், நமது நுரையீரலைப் பாதுகாக்க புகை இல்லாத வீடுகளையும் சமுதாயத்தையும் உருவாக்க அடிமைத்தனத்தை விட ஆரோக்கியத்தைத் தேர்ந்தெடுக்க, நாம் அனைவரும் இணைந்து உறுதிமொழி எடுப்போம்: இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Related Stories: