நன்றி குங்குமம் டாக்டர்
சிறுதானிய சிறப்புகள்
கர்ப்பிணிகளைக் காக்கும் கம்பு!
சிறுதானியம் என்பது வரகு, சாமை, தினை, குதிரைவாலி கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகியவை ஆகும். இவை அனைத்தும் உருவில் சிறியதாக உள்ள தானிய வகைகளாகும். எனவேதான சிறுதானியம் என்று அழைக்கப்படுகிறது.
சிறுதானியங்கள் பழந்தமிழர் உணவில் பெரும் பங்கு வகித்தது என்பதை பல்வேறு சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. மேலும் திருக்குறளில் பல்வேறு பாக்களில் பனை என்பதற்கு எதிர்பதமாய் தினை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வள்ளியை முருகன் தினைக்களத்தில் சந்தித்ததை வள்ளி திருமண கதைப் போக்கில் அறிகிறோம். இவ்வகைத் தகவல்கள் வாயிலாக சிறுதானியம் என்பது பாரம்பரிய உணவு என அறியமுடிகிறது.
பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை சிறுதானியங்கள் அளிக்கின்றன. மேலும், இன்றைய காலச்சுழலான குறைவான மழைப்பொழிவு, குன்றிய மண்வளம், தேவைக்கதிகமான உரப்பயன்பாடு அது ஏற்படுத்தும் கேடுகள், வேளாண் இடுபொருள் விலை ஏற்றம் போன்றவை சிறுதானியமே வருங்கால உணவு என கருத வழிவகுக்கிறது.
சிறுதானியங்களின் ராஜாவாகக் கருதப்படும் கம்பு. நம் உடலுக்குத் தேவையான எண்ணற்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்ட ஒரு அற்புதமான பாரம்பரிய உணவாகும். அரிசியை விட பல மடங்கு சத்துக்கள் நிறைந்த கம்பின் ஆரோக்கிய நன்மைகள்.
நீரிழிவு நோய் கட்டுப்பாடு
கம்பில் குறைந்த அளவு கிளைசெமிக் குறியீடு (லோ க்ளைசமிக் இன்டக்ஸ்) உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்தும், மெக்னிசியமும் இன்சுலின் சுரப்பை சீராக்குகின்றன. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சட்டென்று உயராமல் மெதுவாகக் கலக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதம்.
உடல் எடை குறைப்பு
கம்பில் அதிகப்படியான நார்ச்சத்தும் (ஃபைபர்), மிகக் குறைந்த அளவு கொழுப்பும் உள்ளது. இதனை கஞ்சியாகவோ அல்லது உணவாகவோ எடுத்துக் கொள்ளும்போது, நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தரும். இதனால் தேவையின்றி அதிக உணவு உண்பது தவிர்க்கப்பட்டு, உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும்.
பெண்களுக்கு மிகச் சிறந்த உணவு
மாதவிடாய் பிரச்னைகள்
வளரிளம் பெண்கள் மற்றும் மாதவிடாய் காலத்தில் அடிவயிறு வலி, அதிக ரத்தப்போக்கு ஆகியவற்றால் அவதிப்படும் பெண்களுக்கு கம்பு சிறந்த நிவாரணம் அளிக்கிறது.
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்
பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் கம்பு சாப்பிட்டு வருதால் இழந்த ஆற்றல் மீண்டும் கிடைப்பதோடு தாய்ப்பால் சுரப்பும் கணிசமாக அதிகரிக்கும்.
ரத்த சோகை குணமாகும்
அரிசியை விட கிட்டதட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்து கம்பில் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வருவதன் மூலம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்த சோகை குணமாகும்.
உடல் உஷ்ணத்தைத் தணிக்கும்
கம்பு இயற்கையிலேயே உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் தன்மை கொண்டது. குறிப்பாகக் கோடை காலத்தில் கம்பங்குழ் குடிப்பது உடல் சூட்டைத் தணித்து, உடலை சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும்.
சிறுகுறிப்பு
நீரிழிவு நோயாளிகள் கம்பை கூழாகக் குடிப்பதைத் தவிர்த்து, கம்பு அடை, தோசை அல்லது கம்மஞ்சோறாகச் சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். வாரத்தில் 2-3 நாட்கள் காலையிலோ அல்லது மதிய உணவாகவோ எடுத்துக் கொள்வது மிகச் சிறந்தது.
சமீபத்திய மருத்துவ மற்றும் ஆராய்ச்சிகள்
உலகளாவிய பயிர் ஆராய்ச்சி நிறுவனமான ICRISAT (International crops research institute for the semi – Arid Tropics) மற்றும் பல்வேறு ஊட்டச்சத்து அமைப்புகள் நடத்திய ஆய்வுகள்.
மனநலம் மற்றும் தூக்கத்தை மேம்படுத்துகிறது
சமீபத்தில் மருத்துவ ஆய்வுகளின்படி, விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கம்பு கலந்த உணவை வழங்கிய போது, அவர்களின் மன அழுத்தம், பதற்றம் மற்றும் தூக்கக் குறைபாடுகள் கணிசமாகக் குறைந்தது கண்டறியப்பட்டுள்ளது.
கம்பில் உள்ள பி- வைட்டமின்கள் மற்றும் ஆன்டி – ஆக்ஸிடன்ட்டுகள், மூளையின் செயல்பாட்டை சீராக்கி, நல்ல தூக்கத்தைத் தூண்டும் மெலடோனின் சுரப்பிற்கு உதவுகின்றன.
உயிர் செறிவூட்டப்பட்ட கம்பு
விஞ்ஞானிகள் இயற்கையான முறையில் இரும்பு மற்றும் துத்தநாகச் சத்துகள் அதிகமாக இருக்கும்படி மரபணு மாற்றம் இல்லாத பயோபோர்ட்டிஃபைட் கம்பு ரகங்களை உருவாக்கியுள்ளனர். வெறும் 250 கிராம் மேம்படுத்தப்பட்ட கம்பை சாப்பிடுவதன் மூலம், ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவையான இரும்புச்சத்தில் 80-84 சதவீதம் மற்றும் ஜிங்க் துத்தநாகச் சத்தில் 100 சதவீதம் அளவை முழுமையாகப் பெற முடியும். இது ரத்தசோகை மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாட்டிற்கு மிகச்சிறந்த தீர்வு.
விளையாட்டு வீரர்களுக்கான சிறந்த உணவு
கம்பில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் (ஆன்டி – இன்ஃப்ளமெட்ரி) உடற்பயிற்சி அல்லது கடின உழைப்புக்குப் பிறகு ஏற்படும் தசை வீக்கம் மற்றும் உடல் சோர்வை விரைவாகக் குணப்படுத்துகின்றன. இதிலுள்ள லிக்னைன்ஸ் மற்றும் பாலிஃபினால்கள் உடலின் ஓட்டுமொத்த நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.கவனிக்க வேண்டியவை கம்பில் இயற்கையாகவே ஆக்ஸாலிக் அமிலம் இருப்பதால் அது உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதை சற்று குறைக்கலாம். எனவே, கம்பை சமைப்பதற்கு முன்பு நன்றாகக் கழுவி, 4 முதல் 6 மணி நேரம் ஊறவைத்து சமைப்பது அல்லது முளைக்கட்டிப் பயன்படுத்துவது அமிலத்தை நீக்கி, சத்துக்கள் முழுமையாக உடலுக்குக் கிடைக்க உதவும்.
அதிக நீர்ச்சத்து மற்றும் நீர் சமநிலை
கம்பஞ்சோறு அல்லது கூழ் தயாரிக்கும் போது அதிகளவு தண்ணீரை அது ஈர்த்துக் கொள்கிறது. அதை நாம் உட்கொள்ளும்போது கோடைகாலத்தில் வெயிலால் உடலில் ஏற்படும் நீர் வறட்சியை தடுத்து நீர்ச்சத்தை சமமாகப் பேண உதவுகிறது. உடலில் போதிய நீர்ச்சத்தி இருந்தாலே உடல் சூடு தானாகக் குறையும்.
விண்வெளி வீரர்களுக்கான எதிர்கால உணவு
ஐக்கிய நாடுகள் சபை கம்பை ஒரு ஊட்டச்சத்து மிக்க தானியம் என்று அங்கீகரித்துள்ளது. புவி வெப்பமயமாதல் அதிகரித்து வரும் இந்தச் சூழலில் எதிர்கால உலகிற்குத் தடையின்றி கிடைக்கக்கூடிய மிக முக்கியமான உணவு ஆதாரமாய் கம்பு விளங்குகிறது.
