ரத்த அழுத்தம்

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய பரபரப்பான நவீன காலத்தில் நம்மிடையே காணப்படும் மிக பொதுவான மற்றும் ஆபத்தான உடல்நலப் பிரச்னைகளில் ஒன்று ‘ஹைபர்டென்ஷன்’ (Hypertension) எனப்படும் உயர் ரத்த அழுத்தம். இது வலியையோ அல்லது வெளிப்படையான அறிகுறிகளையோ காட்டாமல் உடலைத் தாக்கக்கூடியது. பல ஆண்டுகளாக இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் கண்களை இது அமைதியாகச் சேதப்படுத்துவதால், உயர் ரத்த அழுத்தத்தை ‘சைலன்ட் கில்லர்’ (silent killer) என்று அழைக்கிறோம்.

உலகம் முழுவதும், 30 முதல் 79 வயதுக்குட்பட்டவர்களில் மூன்றில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் கோடிக்கணக்கான மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் மிகச் சிறிய அளவினரே அதைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பலருக்கு பக்கவாதம் (Stroke), மாரடைப்பு அல்லது சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு வரும் வரை தங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதே தெரிவதில்லை என்பது கவலைக்குரியது.

ஒவ்வொரு ஆண்டும் மே 17 அன்று அனுசரிக்கப்படும் உலக உயர் ரத்த அழுத்த தினம் (World Hypertension Day), இது ஒரு பொதுவான பாதிப்பு என்பதையும், அதே நேரம் இதைத் தடுக்க முடியும் என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது. ‘‘இரத்த அழுத்தத்தை இணைந்து கட்டுப்படுத்துவோம்!” (Controlling Hypertension Together!) என்ற 2026-ம் ஆண்டின் கருப்பொருள், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது என்பது தனிநபர் சார்ந்த விஷயம் மட்டுமல்ல; அது குடும்பங்கள், சமூகங்கள், நிறுவனங்கள் மற்றும் சுகாதார அமைப்புகளின் ஒரு கூட்டுப் பொறுப்பு என்பதையும் வலியுறுத்துகிறது.

இரத்த அழுத்தம் (Hypertension) என்றால் என்ன?

இதயம் இரத்தத்தை உடல் முழுவதும் செலுத்தும் வகையில் வெளியேற்றும் போது, இரத்தமானது தமனிகளின் (Arteries) சுவர்களில் செலுத்தும் விசையே இரத்த அழுத்தம் ஆகும். காலப்போக்கில் இந்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாக இருக்கும்போது, தமனிகள், இதயத் தசைகள், சிறுநீரகங்கள் மற்றும் பிற உறுப்புகள் தொடர்ச்சியான அழுத்தத்திற்கு உள்ளாவதால், நீண்ட கால பாதிப்பிற்கு வழிவகுக்கின்றன.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, குறைந்தது இரண்டு வெவ்வேறு நாட்களில் எடுக்கப்பட்ட இரத்த அழுத்த அளவீடுகள் 140/90 mmHg அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால், அது உயர் இரத்த அழுத்தம் என்று கண்டறியப்படுகிறது.

உயர் இரத்த அழுத்தத்திற்கு முந்தைய நிலை ப்ரீ-ஹைபர்டென்ஷன் (Pre-hypertension) என்று அழைக்கப்படுகிறது. இது, உயர் இரத்த அழுத்த நிலையை அடையாத, ஆனால் இயல்பான அளவை விட அதிகமாக இருக்கும் ஒரு நிலையைக் குறிக்கிறது. இப்பிரச்னைக்கு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த நபர் முழுமையான உயர் இரத்த அழுத்த நிலைக்குத் தள்ளப்படுவார் என்பதைக் குறிக்கும் எச்சரிக்கை அறிகுறியாக அமைந்திருக்கிறது.

ஒளிந்திருக்கும் ஆபத்து

உயர் இரத்த அழுத்தம் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களை ஆரோக்கியமாகவே உணர்கிறார்கள். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வழக்கமாக இதற்கு எவ்வித எச்சரிக்கை அறிகுறிகளோ அல்லது வெளிப்படையான உபாதைகளோ இருப்பதில்லை. அதனால்தான், நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக நம்பினாலும் அல்லது இதயப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பே இல்லாத இளைஞராக இருந்தாலும், தவறாமல் இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பது மிகவும் அவசியமாகும்.

ஏன் பெரும்பாலான இந்தியர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது?

இந்தியாவில் உயர் இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை நவீன வாழ்க்கை முறையோடு தொடர்புடையவை. வயது மற்றும் குடும்பப்பின்னணி போன்றவை பாதிப்புக்கான வாய்ப்பை அதிகரித்தாலும், பின்வரும் வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளே மிக முக்கியப் பங்காற்றுகின்றன:

*அதிகப்படியான உடல் எடை
*உடற்பயிற்சியின்மை
*உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொள்ளுதல்
*பதப்படுத்தப்பட்ட உணவுகள் (Processed foods)
*புகையிலை மற்றும் மதுப் பழக்கம்
*தீராத மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை.

இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் மற்றும் நகர்ப்புற சுகாதாரப் பரிசோதனைத் திட்டங்கள் (Health check programmes), சராசரியாக 38 வயது கொண்ட இளம் ஊழியர்களிடமே அதிகப்படியான உடல் எடை, சீரற்ற கொலஸ்ட்ரால் அளவு, சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை (Prediabetes) மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் இருப்பதைக் காட்டுகின்றன. இந்தப் பரிசோதனைகளில், அதிகப்படியான உடல் எடை என்பது இதய நோய்களுக்கான முதன்மைக் காரணியாகத் தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்படுகிறது; நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தே பணியாற்றுவதும், குறைந்த உடல் உழைப்பும் இதற்கு முக்கியத் தூண்டுகோலாக அமைகின்றன.

மேலும், உயர் இரத்த அழுத்தம் என்பது இப்போது முதியவர்களுக்கு மட்டுமே உரியப் பிரச்னையாக இல்லை. சமீபத்திய ஆய்வுகளின்படி, இந்தியாவில் குறைந்த வளர்ச்சியடைந்த மாநிலங்கள் மற்றும் கிராமப்புற மக்களிடையே, குறிப்பாக இளம் வயதினரிடையே இரத்த அழுத்தம் கவலைக்குரிய வகையில் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, ஒரு காலத்தில் முதியவர்களுக்கு மட்டுமே வரும் நோய்களாகக் கருதப்பட்ட பக்கவாதம் மற்றும் மாரடைப்பு, இன்று 30 மற்றும் 40 வயதுடையவர்களையும் அதிகளவில் பாதிக்கிறது.

நோய் கண்டறிதல்: ஒரு எளிய பரிசோதனையில் தொடங்குகிறது

ஒரு கதிரியக்க நிபுணரின் (Radiologist) பார்வையில், உயர் இரத்த அழுத்தத்தின் பாதிப்புகள் ஸ்கேன் (Scan) அறிக்கைகளில் தெரிய வரும்போது, நிலைமை ஏற்கனவே முற்றியிருக்கும். ஆனால், இந்த நோயைக் கண்டறிவது ஸ்கேன்களை விட மிக எளிமையான ஒன்று – கையில் ஒரு பட்டையைக் (Cuff) கட்டி செய்யப்படும் சாதாரண இரத்த அழுத்தப் பரிசோதனை மட்டுமே இதற்குத் தேவை.

யார் யாரெல்லாம் பரிசோதிக்க வேண்டும்?

30 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு பெரியவரும் அவ்வப்போது கிளினிக், மருத்துவ முகாம்கள் அல்லது வீட்டிலேயே நம்பகமான டிஜிட்டல் கருவியைக் கொண்டு இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

ஒருமுறை தெரிந்தால் போதுமா?

ஒருமுறை மட்டும் அளவு அதிகமாகத் தெரிவதால் உங்களுக்கு இரத்த அழுத்தம் இருப்பதாக அர்த்தமல்ல. சரியான ஓய்வு, சரியான அளவுள்ள பட்டை (Cuff size) மற்றும் சரியான முறையைப் பின்பற்றி, இரண்டு வெவ்வேறு நாட்களில் எடுக்கப்படும் அளவீடுகளே இதை உறுதிப்படுத்தும்.

மறைமுக இரத்த அழுத்தம் (Masked Hypertension)

சிலருக்கு மருத்துவமனையில் பரிசோதிக்கும்போது அளவு சரியாக இருக்கும், ஆனால் வீட்டில் பரிசோதிக்கு போது அதிகமாக இருக்கும். இதைத் துல்லியமாகக் கண்டறிய வீட்டில் இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கவோ அல்லது 24 மணிநேர கண்காணிப்பு (Ambulatory monitoring) முறைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்.

தவறாமல் பரிசோதிக்க வேண்டியவர்கள்

*30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்.
*அதிக உடல் எடை கொண்டவர்கள்.
*குடும்பத்தில் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அல்லது இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள்.
*கர்ப்பிணிப் பெண்கள்

சமூகங்களில் எடுக்கப்படும் பரிசோதனைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையான பரிசோதனை திட்டங்கள் மூலம் இதுவரை கண்டறியப்படாத பலருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, ஆரோக்கியமாக இருக்கிறோம்” என்று அலட்சியப்படுத்தாமல் பரிசோதிப்பதே முதல் படியாகும்.

ஒரு கதிரியக்க நிபுணராக, உயர் இரத்த அழுத்தத்தை நான் ஒரு காகிதத்தில் உள்ள எண்ணாகப் பார்ப்பதில்லை; மாறாக உடலின் உள்ளே ஏற்படும் மாற்றங்களாகவே காண்கிறேன். இரத்த அழுத்தத்தின் பாதிப்புகளை ஸ்கேன்கள் மூலம் பின்வருமாறு நாங்கள் கண்டறிகிறோம்:

ப்ரெய்ன் இமேஜிங் (Brain Imaging)

மிகச்சிறிய அளவிலான ‘சைலன்ட் ஸ்ட்ரோக்’ (Silent strokes), இரத்தக் கசிவு அல்லது மூளையின் சிறிய இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புகளைக் காண்கிறோம். இவை எதிர்காலத்தில் முடக்குவாதத்தை (Stroke) ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கின்றன.

இதயம் மற்றும் மார்பு இமேஜிங்

இரத்த அழுத்தத்தினால் நீண்ட நாட்களாக இதயம் அதிக சிரமப்பட்டு வேலை செய்வதால், இதயத் தசை தடிமனாகி இருப்பதையும் (Thickened heart muscle), இதயத்திற்கு இரத்தம் செல்லும் தமனிகள் குறுகி இருப்பதையும் பார்க்க முடிகிறது.

சிறுநீரகப் பாதிப்புகள்

வயிற்றுப்பகுதி அல்ட்ராசவுண்ட் (abdominal ultrasound) அல்லது சிடி ஸ்கேன்களில், சிறுநீரகங்கள் சுருங்கித் தழும்புகள் ஏறியிருப்பதைக் காண முடியும். சில நேரங்களில் சிறுநீரகத்திற்குச் செல்லும் தமனிகள் குறுகியிருத்தல் அல்லது அட்ரீனல் சுரப்பியில் உள்ள கட்டிகள் போன்ற ‘செகண்டரி ஹைபர்டென்ஷன்’ (Secondary hypertension) காரணிகளையும் கண்டறிய முடிகிறது.

– தொடரும்

தொகுப்பு: கதிரியக்க மருத்துவ நிபுணர் பிரசன்ன விக்னேஷ்