வத்தலக்குண்டு அருகே பாதை அடைப்பு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

வத்தலக்குண்டு, மார்ச் 7: பாதையை பாறைகளை வைத்து அடைத்ததை கண்டித்து வத்தலக்குண்டு அருகே பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டி ஊராட்சியில் மீனாங்கண்ணிபட்டியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  வசித்து வருகின்றனர். இவ்வூர் மக்கள் மூன்று தலைமுறையாக மீனாங்கண்ணி பட்டியிலிருந்து பட்டாளகருப்பு தோட்டப்பாதை வழியாக குரும்பபட்டி சாலை சென்று அங்கிருந்து பழைய வத்தலக்குண்டு சென்று வந்தனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் தோட்டப்பாதையை பொக்லைன் மூலம் பெரிய பாறைகளைக் கொண்டுவந்து வைத்து அடைத்துள்ளனர். இதனால் கிராமமக்கள் அவ்வழியே செல்ல முடியாமல் பண்ணைப்பட்டி விராலிப்பட்டி வழியாக 7 கி.மீ சுற்றி செல்லும்நிலை ஏற்பட்டது. இதனால் அவதியடைந்த பொதுமக்கள் பட்டாள கருப்பு எழுதிக்கொடுத்த ஒப்பந்தத்தை எடுத்துக்கொண்டு வத்தலக்குண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் இன்ஸ்பெக்டர் பவுலோசிடம் ஒப்பந்த நகலை இணைத்து புகார் மனு கொடுத்தனர். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மீனாங்கண்ணிபட்டியைச் சேர்ந்த விவசாயி ஜெயராமன் கூறுகையில்,`` சிலரின் தூண்டுதலின் பேரில் நாங்கள் செல்லும் பாதை அடைக்கப்பட்டது. எப்போதும் போல் செல்ல அனுமதி வேண்டும். கிடைக்காவிட்டால் தொடர்ந்து போராடுவோம்’’ என்றார்.

Related Stories: