வைபவின் முதிர்ச்சியான ஆட்டம்; பயிற்சியாளர் லஷ்மன் பாராட்டு

 

ஹராரே: ஜிம்பாப்வே அணியுடனான டி20 தொடரில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்து அசத்தியதில் முக்கிய பங்காற்றிய இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷியின் பேட்டிங்கை தலைமை பயிற்சியாளர் வி.வி.எஸ்.லஷ்மன் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.அந்த தொடரின் 3 போட்டியிலும் விளையாடிய சூரியவன்ஷி 50, 20, 81 என சிறப்பாகப் பங்களித்து தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

மூன்றாவது போட்டியில் அவரது பேட்டிங் குறித்து பயிற்சியாளர் வி.வி.எஸ் லஷ்மன் கூறியதாவது:மிகவும் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வைபவ் பேட்டிங்கில் நான் பார்த்த சிறப்பான அம்சம் அதுதான். ஒவ்வொரு அனுபவத்திலும், ஒவ்வொரு போட்டியிலும் அவர் சூழ்நிலையை நன்கு கவனித்து புரிந்துகொண்டு அதற்கேற்ப தனது ஆட்ட முறையிலும் மாற்றங்களை மேற்கொள்கிறார்.

இது மிகப் பெரிய மைதானம் என்பதுடன், ஆடுகளத்தில் பந்து சற்று மெதுவாகவும் நின்றும் வந்தது. அதற்கேற்பவே ஜிம்பாப்வே பவுலர்களும் வைபவை வீழ்த்துவதற்கான வியூகங்களை வகுத்திருந்தார்கள். ஆனால், அவற்றை அவர் மிகத் துல்லியமாகக் கணித்து தனது அணுகுமுறையில் சிறு மாற்றங்களை செய்து அமர்க்களப்படுத்திவிட்டார். இது மிகவும் முதிர்ச்சியான ஆட்டம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த 6 மாதங்களாகவே அவரது புரிதலும், முதிர்ச்சியும் விழிப்புணர்வும் புதிய உயரங்களை எட்டி வருகிறது. அதனால் தான் கடினமான தருணங்களையும் நெருக்கடிகளையும் சமாளித்து உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராகவும் அவரால் சிறப்பாக பேட் செய்ய முடிகிறது.

யு-19 உலக கோப்பையில் இருந்தே அவரை எங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். விஜயவாடாவில் நடந்த நான்குநாடுகள் தொடரில் இருந்து அவரது பேட்டிங்கை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அவரது உடல்தகுதியை மேம்படுத்துவதிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். சர்வதேச அளவில் சாதித்தாலும் அவர் 15 வயது சிறுவன் தான் என்பதை மறந்துவிடக் கூடாது. ஜிம்பாப்வே தொடரில் சதம் அடிக்கவில்லையே என வருத்தப்பட்டார். இன்னும் நிறைய வாய்ப்புகள் அவருக்காக காத்திருக்கின்றன. மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு சிறப்பாக விளையாடி சர்வதேச அரங்கில் பல்வேறு சாதனைகளை உடைத்து நொறுக்குவார் என நம்புகிறேன்.
இவ்வாறு லஷ்மன் கூறியுள்ளார்.

Related Stories: