பகுதி 2
249. பஞ்ச ப்ரேதா ஸநாஸீநா
250. பஞ்ச ப்ரஹ்ம ஸ்வரூபிநீ
251. சிந்மயீ
252. பரமாநந்தா
253. விஜ்ஞாந கந ரூபிணீ
(சென்ற இதழ் தொடர்ச்சி…)
தைத்திரீய உபநிஷத்தில் ஆனந்வல்லீ என்கிற பகுதியே இருக்கிறது. அந்த ஆனந்தத்தை வேதம் எப்படியெல்லாம் வர்ணிக்கின்றது என்பதை பார்க்கலாம். அந்த ஆனந்தத்தை சொல்லும்போது இதைவிட இது ஆனந்தம். இதை விட… இது ஆனந்தம் என்று சொல்லியபடியே வேதம் கடைசியில் கொண்டுபோய் உன் சொரூபமே ஆனந்தம் என்று முடிக்கும். அதைத்தான் சகஸ்ரநாமம் நமக்கு பரமானந்தா என்று ஒரே வார்த்தையில் காண்பித்துக் கொடுக்கிறது. இந்த ஆனந்தத்தை வார்த்தையிலோ, செயலிலோ, எண்ணத்தாலோ அளக்க முடியாது. அந்த உயர்ந்த ஸ்திதியில் கொண்டுபோய் வைப்பாள்.
ஏனெனில், எல்லா ஜீவன்களுமே ஏதோ ஒரு வகையில் ஒரு ஆனந்தத்தை , ஒரு சுகத்தை, ஒரு இன்பத்தை நாடித்தான் போய்க் கொண்டிருக்கிறோம். குழந்தை முதல் முதியோர் வரை சுகம் வேண்டும், நிம்மதி வேண்டும் என்றுதான் கேட்பார்கள். அதிலும் வந்து வந்து போகும் சுகமாக இல்லாமல் நிரந்தரமானதொரு சுகத்தையே எல்லோரும் தேடுகின்றனர்.
இப்போது இருக்கும் நிலையில் ஞானத்தை அடை என்று சொன்னால் பிரயோஜனமாக எடுத்துக் கொள்ள மாட்டான். ஆனால், ஆனந்தத்தை சொன்னால் உடனே எடுத்துக் கொள்வான். எப்போதுமே நீ ஆனந்தமாக இருப்பாய் என்று சொன்னால் உடனே கேட்பான்.
நித்தியமான நிலையான பரமானந்த நிலையையே அம்பாள் இந்த நாமாவின் மூலம் அனுக்கிரகம் செய்கிறாள்.
* விஜ்ஞாந கந ரூபிணீ – இப்படி அனுக்கிரகம் செய்யக்கூடியவள் எப்படி இருக்கிறாள் எனில் விஞ்ஞானம் கந ரூபிணீயாக இருக்கிறாள். இங்கு விஞ்ஞானம் என்று சொல்வது தினசரி வாழ்க்கையில் நாம் பார்க்கும் அறிவியலுக்கே சொல்கிறோம். சம்பிரதாயத்தில் நாம் அறிவியலை விஞ்ஞானம் என்று சொல்வது கிடையாது. எப்படியோ அந்த வார்த்தை பொருள் கொண்டாகி விட்டது. இது முக்கியமான விஷயம்.
விக்ஞானம் அல்லது விஞ்ஞானம் என்றால் வி என்கிற எழுத்து வந்தால் விசேஷம் என்கிற பொருள் வரும். விக்ஞானம் என்றால் விசேஷமான ஞானம்.
விசேஷமான ஞானம் என்றால், நாம் வைக்கும் மதிப்பீட்டின்படி அளவுக்கு உட்பட்ட ஞானம் அல்ல. வசின்யாதி வாக் தேவதைகள் நம்மை ஒரு கொட்டு கொட்டி உன்னுடைய வரையறைக்கு உட்பட்டிருக்கும் ஞானானுபவம் அல்ல இது. சிந்மயீ… பரமானந்தா… என்று சொல்லிவிட்டதால், நீ உன்னுடைய அளவுகோலை வைத்துக் கொண்டு… என்ன அளந்தாலும் அதற்கெல்லாம் மேலே… மேலேதான் அவள் இருப்பாள். நம்முடைய அளவீடுகளுக்கெல்லாம்
உட்பட மாட்டாள்.
இங்கு விக்ஞான ரூபிணீ என்று சொல்லாமல், விக்ஞான கந ரூபிணீ என்று சொல்கிறார்கள். நம்முடைய அளவுக்கெல்லாம் விக்ஞானமாக இருந்தால் கூட, நமக்காக கந பூதமாக – அதாவது ஸ்தூலமாக நம்மால் உணரப்படுவதைத்தான்
கந பூதம் என்று சொல்லுவோம். ஏனெனில், விக்ஞானம் என்று பரம சூட்சுமமாக இருக்கும் அம்பாள் நம்மீது கொண்ட கருணையினால்… காருண்யத்தினால் தன்னை கநீ என்கிற அல்லது கந பூதமாக… ஸ்தூலமாக வெளிப்படுத்திக் கொள்கிறாள்.
எப்படி வெளிப்படுகிறாள்? நம்முடைய கண்ணுக்கு முன்னால் பார்த்து பேசி தொட்டு மகிழக் கூடிய குருநாதருடைய ரூபமாக வெளிப்படுகிறாள். அந்த குருநாதர் காண்பித்து கொடுக்கக் கூடிய கோயில்களில், கோயில் மூர்த்தங்களில், மந்திர ரூபத்தில், சக்கர ரூபத்தில், யந்த்ர ரூபத்தில், விக்கிர ரூபத்தில் வெளிப்படுகிறாள்.
இதற்கெல்லாம் முன்னாலேயே குருநாதருடைய ரூபத்தில் வெளிப்படையாக வெளிப்படுகிறாள். அம்பாள் எப்படி குரு சொரூபமாக வருகிறாள்.
இந்த பஞ்ச பூதங்களால் ஆன உலகம் நமக்கு தெரிகிறது. ஆனால், குருவானவர் ஸ்தூலமான உலகத்திலிருக்கக்கூடிய சூட்சுமமான சக்தி சொரூபத்தை நமக்கு காண்பித்து கொடுக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள் மாற்றங்கள் நிகழத் தொடங்குகின்றன. பஞ்ச பூதங்களுக்கு அடிப்படையாக இருக்கின்ற தன்மாத்திரைகள். அந்த தன் மாத்திரைகளுக்கு அடிப்படையாக இருக்கக் கூடிய அந்தகரணங்கள். அந்த அந்தகரணங்களுக்கு அடிப்படையாக இருக்கக் கூடிய தத்துவங்கள். அந்த தத்துவங்களுக்கு அடிப்படையாக இருக்கக் கூடிய பஞ்ச கிருத்தியங்கள். அந்த பஞ்ச கிருத்தியங்களை செய்யக் கூடிய பஞ்ச பிரம்மங்கள். அந்த பஞ்ச பிரம்மங்களும் ஒரே பிரம்மத்தினுடைய சொரூபம் என்பது தெரிகின்றது. அந்த ஒரு பிரம்மமே சாட்சாத் லலிதா திரிபுரசுந்தரி. இந்த known fieldல் இருந்து unknown என்கிற நம்முடைய அறிதலுக்கு அப்பாற்பட்ட பிரம்ம நிலைக்கு கொண்டு போகிறாள்.
இந்த நாமங்களுக்கான கோயிலாக திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தைச் சொல்லலாம். ஏனெனில், வித்யா பரமான தந்த்ரத்தையும் இந்த நாமங்கள் காண்பித்துக் கொடுக்கின்றன. ஞான பரமாக இருக்கின்ற வேதாந்தத்தையும் காண்பித்துக் கொடுக்கின்றன என்று பார்த்தோம். மேலும் அம்பிகையானவள் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறாள் என்று பார்த்தோம். நம்முடைய கோயில்களில் சிம்மாசனத்தில் இருப்பதற்கென்றே ஒரு மூர்த்தம் உள்ளது. அந்த மூர்த்தமே திருவாரூர் தியாகராஜ மூர்த்தம்.
இப்போது மேலே நாம் சொன்ன அனைத்து சூட்சுமங்களும் தியாகராஜ மூர்த்திக்கு உண்டு. தியாகராஜர் எழுந்தருளியிருப்பது பஞ்ச பிரம்மாஸனம். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், சதாசிவனுக்கு மேலே காமேஸ்வர சொரூபமாக தியாகராஜர் இருக்கிறார். அந்த தியாகராஜருடைய இடது பக்கம் மஹா காமேஸ்வரியாக லலிதா திரிபுரசுந்தரியாக அம்பாள் அங்கு இருக்கிறாள். அந்த அம்பாளை அழகான தமிழ்ப் பெயரில் கொண்டி என்று அழைப்பார்கள். கொண்டி சமேத தியாகராஜராக சுவாமியாக இங்கு அருள்பாலிக்கிறார்கள். அதை நாம் தரிசிக்க வேண்டும். இந்த நாமாவுக்கான வெளிப்படையான ஒரு மூர்த்தமாகும். சைவத்தின் தலைநகரமாகவும், தந்த்ர சாஸ்திரத்தில் வித்யா பரமாக பூஜை நடைபெறும் கோயில் இதுவேயாகும்.
சின்மயீ, பரமானந்தா, விஜ்ஞான கந ரூபீணி என்று பார்த்ததுபோல் அவள் ஞான மயமாக, ஆனந்த மயமாக, சூட்சும மயமாக இருந்தாலும் ஸ்தூலமாக வெளிப்பட்டாள் என்று பார்த்தோம் அல்லவா? இங்கு தியாகராஜரின் ரகசியமே இதுதான். அவர் சூட்சுமமான மூர்த்தி. கைலாசத்திலிருந்து இந்திரலோகம் வந்து நமக்காக அவர் கருணையாக பூலோகத்திற்கு வந்ததே கொண்டி சமேத தியாகராஜர் மூர்த்தமாகும். இதற்குப் பிறகு ஸ்கந்தர் ஆனந்த சொரூபமாக இருப்பார். ஆனால், ரகசியமாக இருப்பார். மேலும் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்காக வெளிப்பட்டு வீதியில் நடந்திருக்கிறார். அதனால் வீதி விடங்கர் என்று பெயர்.
மேலேயுள்ள, எல்லா விஷயத்தையும் பார்த்தால் இந்த நாமங்களுக்கான கோயிலாக திருவாரூர் தியாகராஜரையே சொல்லி ஆனந்தமாக தரிசித்து வரலாம்.
(சக்தி சுழலும்…)
