காப்பு என்பதற்கு பாதுகாத்தல் பத்திரப்படுத்துதல் என்பது பொருள். அனைத்து நூல்களிலும் முதலில் காப்புச் செய்யுள் என்னும் பெயரில் தெய்வங்களைத் துதிக்கும் பாடல்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். காப்புச் செய்யுளில் அந்தப் பாடலை பாடுவதால் உண்டாகும் பலன் சொல்லப்பட்டிருப்பதும் காணப்படுகிறது.பிள்ளைத்தமிழ் நூல்களில் முதல் பருவத்திற்குக் காப்புப் பருவம் என்றே பெயரிடப்பட்டுள்ளது. இதில் பிள்ளைகளை காக்கும்படி திருமால், விநாயகர், முருகன், சப்த மாதர்கள் ஆகியோரிடம் வேண்டும் படியான பாடல்கள் இடம் பெற்றுள்ளன. நூலில் இறுதி பாடல் வாழ்த்துப் பாடலாக அமையும்.
திருஞானசம்பந்தர் தாம் அருளிச் செய்த பாசுரங்களின் இடம்பெற்றுள்ள பத்து பாடல்களைப் பாடுவதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பதினோராவது பாடலில் கூறியுள்ளார். இந்தப் பாடலுக்கு திருக்கடைக்காப்பு என்பதும் பெயரானது.இது பாடலில் கடைசியில் வைக்கப்பட்ட காப்பாதலின் கடைக்கு காப்பு எனப்பட்டது. திருஞானசம்பந்தருக்கு முன்பேயே பதிகத்தை அருளிச் செய்த காரைக்கால் அம்மையார் இந்த முறையை கையாண்டு தான், அருளிய பாடலை பாடுவதால் உண்டாகும் பயனைத் தெரிவித்துள்ளார் என்பது இங்கே எண்ணத்தக்கதாகும்.
திருஞானசம்பந்தர் பாசுரத்தைப்பாடி பின்னர், காப்பாக திருக்கடைகாப்பை பாடியதைச் சேக்கிழார் பெருமான் பல இடங்களில் குறித்துள்ளார்.
ஒவ்வொரு பாடலுக்கும் சொல்லாவிட்டாலும் குறிப்பிடத்தக்க பாடல்களை சொல்லும்போது பதிகத்தைப் பாடி நிறைவுசெய்து கடைகாப்பு சாத்தனார் சொல்லிச் செல்வதை பெரியபுராணத்தில் பல இடங்களில் காண்கிறோம். அத்தகைய பாடல்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.சிலர், திரு ஞானசம்பந்தர் பாசுரங்களை திருக்கடைக்காப்பு என்றும் திருநாவுக்கரசர் பாசுரங்களை தேவாரம் என்றும் சுந்தரர் பதிகங்களை திருப்பாட்டு என்றும் பேசியும் எழுதியும் வருகின்றனர் அக்கருத்து பொருத்தமானதல்ல.
பத்தாம் நூற்றாண்டு வரை மூவர் பாட லுக்கு பாசுரம் என்ற பெயரே வழங்கி வந்துள்ளது. கல்வெட்டுகளில் பதிகம் என்று குறிக்கப்பட்டுள்ளது பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரே தேவாரம் என்று சொல்லும் வழக்கம் உண்டானது மூவர் பாடலுமே தேவாரம் என்று அழைக்கப்பட்டது.
தேவாரம் என்பதற்கு தெய்வத்திற்கான இருப்பிடம் என்பது பொருளாகும்.சேக்கிழார் பெருமான் பதிகம் வேறு அதன் இறுதியில் இடம்பெற்றுள்ள 11-ஆம் பாட்டான திருக்கடைக்காப்பு வேறு என்பதைப் பல இடங்களில் குறித்துள்ளார்.உமையவள் அளித்த ஞானப்பாலை உண்டு சிவஞானம் கைவரப்பெற்ற திருஞானசம்பந்தர் தொடுடைய செவியன் என்று தொடங்கி பதிகத்தைப் பாடி நிறைவு செய்தபின் திருக்கடை காப்பாக பாடலை பாடி திருக்காப்பிட்டதைச் சேக்கிழார்,
திருப்பதிகம் நிறைவித்துத்
திருக்கடைக் காப்புச் சாத்தி
இருக்கு மொழிப் பிள்ளையார் எதிர்
தொழுது நின்று அருள
அருள் கருணைத் திருவாளனார் அருள்
கண்டு அமரர் எலாம்
பெருக்க விசும்பினில் ஆர்த்துப்
பிரசமலர் மழை பொழிந்தார்.
இதன் பொருள் சம்பந்த பெருமான் திருப்பதிகம் நிறைவேற்றி திருக்கடை நிறைவேற்றி திருக்கடைக் காப்பு சாத்தி சிவபெருமான் முன்பு நின்றதைக் கண்ட தேவர்கள், வானில் ஆர்ப்பரிப்பு ‘‘தமிழ் மறையாம் பதிகம் பாடி காப்பு செய்து மென்மையான கற்பகம் மலர்களால் பூமாரி பொழிந்தனர் என்பதாம்.
அடுத்தாக திருக்கோலக்காவில் தாளம் பெற்றதைக் காண்கிறோம் இதனை சேக்கிழார் பெருமான்,
காழி வரும் பெரும் தகையார் கையில்
வரும் திருத் தாளக் கருவி கண்டு
வாழிய தம் திருமுடி மேல் கொண்டு
அருளி மனம் களிப்ப மதுர வாயில்
ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன்னிசை
வண் தமிழ்ப் பதிகம் எய்தப் பாடித்
தாழும் மணிக் குழையார் முன் தக்க
திருக் கடைக் காப்புச் சாத்தி நின்றார்.
– என்று பரவியுள்ளார்.
இதன் பொருள் திருக்கோலக்காவில் இறைவன் அருளிய பொன் தாளத்தைப் பெற்ற சம்பந்தர் தலை மேல் வைத்து இணங்கி பாசுரத்தைப் பாடி திருக்கடைக்காப்பு சாற்றினார் என்பதாகும்.
நனிபள்ளி அடைந்த ஞானசம்பந்தர் பதிகம் பாடிய பன் திருகாப்பில் ஆணையிட்டுப் பாடியதை,
காரைகள் கூகை முல்லை என
நிகழ் கலை சேர் வாய்மைச்
சீர் இயல் பதிகம் பாடித்
திருக் கடைக் காப்புத்தன்னில்
நாரியோர் பாகர் வைகும் நனி
பள்ளி உள்குவார் தம்
பேர் இடர் கெடுதற்கு ஆணை
நமது எனும் பெருமை வைத்தார்.
– என்பதால் அறிகிறோம் திருப்பாய்ச்சிலா ஆசிரமத்தில் கொல்லி மழவனின் மகளைப் பற்றி இருந்த நோயை நீக்கிய பதிகத்தை பாடியதை, ‘‘பிணி தீர்க்கும் பதிகம் தண்டமிழ் பாடு பாடினார் சம்பந்தர் சண்பைநாதர்’’ என்றும் அப்பதிகத்தைப் பாடியபின் திருக் கடைக் காப்பு பாடலை பாடியதை ‘‘தமிழ் மறையாம் பதிகம் பாடி காப்பு சாற்றினார்’’’ என்றும் அருளிச் செய்துள்ளார்.
இதன் மூலம் பதிகம் வேறு இறுதிப் பாடலான, திருக்கடைக்காப்பு வேறு என்பதை அறிய முடிகிறது. மேலும், பாடி பரவியதை,
ஏழ் இசையும் ஓங்க
எடுத்தார் எமை ஆளும்
காழியர் தம் காவலனார்
கற்றாங் கெரியோம்பி.
பண்ணார் பதிகத் திருக்
கடைக் காப்புப் பரவி
உள் நாடும் என்பும்
உயிரும் கரைந்து உருக்கும்
விண் நாயகன் கூத்து
வெட்ட வெளியே திளைத்துக் கண்ணார் அமுது உண்டார்.
– என்று பாடப்பட்டுள்ளது.
அடுத்ததாக கொடிமாடச் செங்குன்றூர் என்னும் திருச்செங்கோட்டில் எழுந் தருளி இருந்த வேளையில் அன்பர்களைக் நளிர் ஜுரம் வந்துவாட்ட ஆளுடைய பிள்ளையார் திருநீலகண்டத்தின் சிறப்பித்து தீவினை தீண்டப்பெறா திரு நீலகண்டம் என்று ஆணை மொழி அடங்கிய பதிகத்தை அருளிச் செய்தார்.
இதனைச் சேக்கிழார்,
எவ்விடத்தும் அடியார் இடர் கெடுப்பது
கண்டம் என்று தீவினை
செய்வினை கைவினை திருநீலகண்டம்.
என்று செப்பினார்.
– என்றும் அப்பர் பதிகத்தை பாடியபின் ‘‘ஆய குறிப்பு ஆணை நிகழ அருளிச் செய்து தூயபதிகம் கடைகாப்பு தொடுத்து அணிந்தார்’’ என்றும் சேக்கிழார் குறிக்கின்றார்.திரு தருமபுரம் சென்ற ஞானசம்பந்தர் திருநீலகண்டர் உள்ளம் மகிழ அவர் யாழில் இட்டு பாடும் வகையில் போக மார்த்த பூண் முலையால் என்று தொடங்கும் பாடலை பாடினார். தொடர்ந்து திருக்கடைக்காப்பு பாடலையும் அருளினார். அப்பாடல் பாடுபவர்கள் பெரும் போகத்தை அடைவார்கள் துன்பம், பிணி போன்றவை அவர்களை அணுகாது என்று சொல்லி காப்பிட்டதை அறிய முடிகிறது.
அனைத்து பாசுரங்களின் இறுதியிலும் திருக்கடைக்காப்பு அருளப்பட்டிருந்த போதிலும் சேக்கிழார் சில இடங்களில் மட்டுமே அதை சிறப்பித்துப் பாடியுள்ளார் அதனை திருக்கடைக்காப்பு சாத்தினார் என்று கூறுவதை அறிய முடிகிறது.
ஆட்சிலிங்கம்
